ஜுலை,20-
மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்று மூன்று மாதங்கள் ஆன பின்னர் வீடியோ வெளியாகி நாடே கண்டனக் குரல் எழுப்பவுதால் ஒருவரை கைது செய்து இருப்பதாக அந்த மாநில அரசு இன்று தெரிவித்து இருக்கிறது.
வீடியோ வெளியான பின்னர் பல தனிப்படைகள் அமைத்து விசாரணை நடந்து வருகிறது. அந்த வீடியோவில் உள்ள ஒருவன் கைது செய்யப்பட்டு உள்ளான்.இவன் தான் அந்த நிகழ்வின் மூளையாக செயல்பட்டவன்.மற்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மணிப்பூர் போலிசார் கூறி உள்ளனர்.
முதலமைச்சர் பிரோன் சிங், “தற்போது முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது. அரசு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்கும். மரணதண்டனை போன்ற கடுமையாக தண்டனை குற்றவாளிகளுக்கு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்து இருக்கிறார்.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி, பாலியல் வன் கொடுமை தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அரவிந்த் கெஜ்ரிவல் உட்பட தலைவர்கள் பலரும் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.
பிரியங்கா தமது பதிவில், “சமூகத்தில் வன்முறையின் உச்சத்தை பெண்களும் குழந்தைகளும் சுமக்க வேண்டியிருக்கிறது” என்று வேதனை தெரிவித்து உள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மணிப்பூரில் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரமான வன்முறைக் காட்சியைக் கண்டு முற்றிலும் மனம் உடைந்து விட்டது, வெறுப்பும் விஷமும் மனித குலத்தன் ஆன்மாவையே வேரோடு பிடுங்குகிறது. இத்தகையை அட்டூழியங்களுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்” என்று தெரிவித்து இருக்கிறார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருப்பதாவது.
“மணிப்பூர் விவகாரத்தில் மாண்புமிகு பிரதமர் தனது மௌனத்தை கலைத்துள்ளார். அமெரிக்கா, பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று ஏதோ ஒன்றைத் திறப்பதற்காக மணிப்பூர் மக்களைப் பற்றி அவர் இதுவரை சிறிதும் சிந்திக்கவில்லை. மணிப்பூரை நினைவுகூர அவரைத் தூண்டியது எது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது? மணிப்பூர் பெண்களுக்கு எதிரான சொல்ல முடியாத குற்றத்தின் கொடூரமான வீடியோ அதுவா?
மணிப்பூரில் நடந்த மாபெரும் மனித உரிமை மீறல்களை உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொண்டதா?
மாண்புமிகு பிரதமர் செய்ய வேண்டிய முதல் காரியம், மதிப்பிழந்த பிரேன் சிங்கின் அரசை டிஸ்மிஸ் செய்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதுதான்” என்று சிதம்பரம் தெரிவித்து உள்ளார்.
000