கண்ணுப்பட்டுப் போச்சா சர்மிளா !

கோவையில் தனியார் பேருந்தின் பெண் ஓட்டுநர் சர்மிளா வேலையில் இருந்து விலகியது பெரிய செய்தியாகி உள்ளது. அவருக்கு உதவுவதாக  நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உறுதி அளித்திருக்கிறார்.

கோவையைச் சேர்ந்த 24 வயது சர்மிளா, வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்தின் டிரைவராக பணியாற்றி வந்தார். தமிழ் நாட்டில் தனியார் பேருந்தின் முதல் பெண் டிரைவர் என்பதால் சர்மிளாவுக்கு பெண்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்தது. அவர் சமூக வலைதளங்களிலும் பிரபலமாகி வந்தார்.

சர்மிளாவை பாராட்டி ஊக்கப்படுத்தும் விதமாக தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று காலை அவர் ஓட்டும் பேருந்தில் பயணம் மேற்கொண்டார். முதல் பெண் பேருந்து ஓட்டுநர் என்ற முறையில் சர்மிளாவுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பீளமேடு வரை பயணித்த கனிமொழி, சர்மிளாவிற்கு கை கடிகாரத்தை பரிசளித்து அவரைக் கட்டியணைத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

இந்த நிலையில் பேருந்தில் பயணித்த போது கனிமொழியிடம் அந்தப் பேருந்தின் பெண் நடத்துனர் அன்னதாய் டிக்கெட் வாங்குமாறு கூறி இருக்கிறார். இது பற்றி பேருந்து உரிமையாளர் துரைக்கண்ணுவிடம் சர்மிளா புகார் தெரிவித்த போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. உடனே அவர் வேலையில் இருந்து விலகிக்கொள்வதாகக் கூறிவிட்டு வந்து விட்டார்.

இதுபற்றி சர்மிளாவிடம் கேட்டபோது , “பேருந்தில் கனிமொழி மேடம் பயணம் செய்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவர் பேருந்தில் ஏறியதும் டிக்கெட் எடுக்குமாறு கண்டக்டர் அன்னதாய் கேட்டது எனக்குப் பிடிக்கவில்லை. பிறகு பேருந்து காந்திபுரம் வந்ததும் அலுலகத்திற்குச் சென்று உரிமையாளரிடம் புகார் செய்தேன். அப்போது நான் பிரபலம் அடைவதற்காக இப்படி செய்வதாகக் உரிமையாளர் கூறியதால் பணியில் தொடர்வதை நிறுத்திவிட்டேன்” என்று தெரிவித்தார்.

பேருந்தின் உரிமையாளர் துரைக்கண்ணு “எனக்கும் சர்மிளாவுக்கும் எந்த பிரச்சினையுமில்லை, அவர் கூறும் குற்றச்சாட்டு தவறு. பணியிலிருந்து விலகிக் கொள்வதாக சர்மிளாதான் தெரிவித்துவிட்டுப் போனார்.நான் ஏதும் சொல்லவில்லை. விருப்பப்பட்டால் அவர் பணியில் தொடரலாம்” என்று தெரிவித்தார்.

பேருந்தில் கனிமொழியிடம் டிக்கெட் எடுக்குமாறுக் கேட்ட பெண் நடத்துனர் அன்னதாய், “நான் தவறுதலாக  கனிமொழியிடம் டிக்கெட் கேட்டுவிட்டேன். அவர் சிரிச்சிகிட்டே டிக்கேட் எடுத்துவிட்டு என்னை ஊக்கப்படுத்தினார். உடனே கனிமொழி மேடத்திடம் மன்னிப்புக் கேட்டுவிட்டேன். எனக்கும் சர்மிளாவுக்கும் எந்த பிரச்சனையுமில்லை. சமீபகாலமாக வேலை செய்ய பிடிக்கவில்லை என்பதை தொடர்ந்து சர்மிளா கூறி வந்தார்” என்றார்.

பெண் ஓட்டுநர் சர்மிளா பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட  தகவல் அறிந்த கனிமொழி, அவரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வேறு வேலை மற்றும் தேவையான உதவிகளை அளிப்பதாக உறுதியளித்துள்ளார். அதேபோல் பாஜக தேசிய மகளிரணித் தலைவி வானதி சீனிவாசனும் போனில் தொடர்பு கொண்டு தைரியமாக இருக்க வேண்டும் எனவும் எந்த உதவியாக இருந்தாலும் செய்யத்ள தயார் என்றும் தெரிவித்துள்ளார்.

நல்லது நடந்தால் சரிதான்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *