செப்டம்பர் 19-
’பாஜகவுடனான கூட்டணிமுறிந்து விட்டது’என அதிகாரப்பூர்வமாக அதிமுக அறிவித்து விட்டது.மறைந்த அதிமுக தலைவர்கள் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வந்ததால், இந்த அதிரடி முடிவை அதிமுக மேற்கொண்டுள்ளது.
இன்னும் எட்டு மாதங்களில் மக்களவை தேர்தல் வர இருக்கும் நிலையில்,அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ், அண்மையில் டெல்லி சென்று , மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.அதிமுக- பாஜக கூட்டணியை இருவரும்உறுதி செய்தனர். இந்த பேச்சு வார்த்தையின் போது தொகுதி பங்கீடு குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.ஆனால் அண்ணாமலை, கூட்டணியில் விரிசலை உண்டாக்கி பிளவையும் ஏற்படுத்தி விட்டார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை சில வாரங்களுக்கு முன் தெரிவித்தார். இதற்கு அதிமுக தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அதனை பொருட்படுத்தாத, அண்ணாமலை, அறிஞர் அண்ணா குறித்தும் அண்மையில் விமர்சனம் செய்தார்.இதனால் ’பாஜகவுடன் இனிமேல் கூட்டணி கிடையாது’ என அந்த கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அறிவித்துள்ளார்.’’பாஜகவை சுமக்கவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. பாஜகவுக்கு காலே கிடையாது. அந்த கட்சியால் இங்கே கால் ஊன்றவும் முடியாது.. அதிமுக கூட்டணியில் தற்போது பாஜக இல்லை. இது, எனது தனிப்பட்ட கருத்து அல்ல. கட்சி எடுத்த முடிவு.’’என அவர் குறிப்பிட்டார்.
அதிமுக தகவல் தொழில் நுட்ப அணியினர், பாஜக கூட்டணி தேவை இல்லை என்பதை வலியுறுத்தி ‘நன்றி! மீண்டும் வாராதீர்கள்’ எனும் ’ஹேஸ்டேக்’கை உருவாக்கி, ‘பாஜகவுக்கு எதிராக பதிவிட்டு வருகிறார்கள்.’அதிமுகவுக்கு வலுவான தலைமை இல்லாததால் அண்ணாமலை இப்படி பேசுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.அந்த கட்சியின் ஓட்டுகளை,தங்கள் பக்கம் திருப்பி, திமுகவுக்கு அடுத்த இடத்தில் பாஜகவை நிறுத்த வேண்டும் என்பது அவரது கனவாக உள்ளது. ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை.அதிமுக துணையில்லாமல் பாஜக தனித்து போட்டியிட முடியாது என்பது அந்த கட்சியின் மேலிட தலைவர்களுக்கு நன்றாக தெரியும்.. எனவே,அதிமுகவுடன் சமரச பேச்சு நடத்த டெல்லி தலைமை, மூத்த தலைவர் ஒருவரை சென்னைக்கு அனுப்பி வைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
000