பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் ரூ.10 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்ட விவகாரம் , கோடம்பாக்கத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
‘ஜென்டில்மேன்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமான ஷங்கர், பிரமாண்ட படங்களை மட்டுமே இயக்கும் டைரக்டர். 2010 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ படம் வெளியானது.
‘இது எனது கதை’ என்று சொந்தம் கொண்டாடிய எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், ஷங்கர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
‘ இது காப்புரிமை சட்டத்தின்படி கிரிமினல் குற்றம் ‘என எழும்பூர் நீதிமன்றத்தில் ஆரூர் தமிழ்நாடன் வழக்கும் தொடர்ந்தார்.
இதன் அடிப்படையில், அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. ஒரு பரபரப்பு நிகழ்வாக, காப்புரிமை விவகாரத்தில் இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி மதிப்பிலான 3 அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
காப்புரிமை சட்டத்தின்படி, அமலாக்கத்துறை, டைரக்டர் ஒருவரது , சொத்துக்களை முடக்குவது, தமிழ் சினிமாவில் இதுவே முதல்முறை.
இந்த சம்பவம், கோடம்பாக்கத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சொத்து முடக்கம் செய்யப்பட்டதற்கு அமலாக்கத் துறை அளித்துள்ள விளக்கம்:
‘ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘எந்திரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.290 கோடி வசூல் செய்தது
இந்த படத்துக்காக ஷங்கர் ரூ.11.5 கோடி சம்பளம் பெற்றுள்ளார்- இந்த திரைப்படத்தின் கதை அமைப்பு, கேரக்டர்களின் தன்மை, கருப்பொருள் கூறுகளை, ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா ஆய்வு செய்தது.
ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ‘ஜுகிபா’ கதைக்கும் ‘எந்திரன்’ படத்தின் கதைக்கும் இருக்கும் ஒற்றுமையை அறிக்கையாக சமர்ப்பித்துள்ளது.
ஷங்கர் மீதான கதை திருட்டு குற்றச்சாட்டு நிரூபணமாகி உள்ளது – காப்புரிமை சட்டத்தை ஷங்கர் மீறியுள்ளார் – இது சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் குற்றம்
எனவே, சட்டவிரோத பணப்பரிமாற்றம் தடுப்புச் சட்டத்தின் கீழ், ஷங்கரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட சொத்துகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.’என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது .