கமலுடன் மீண்டும் கை கோர்க்கும் கவுதம் மேனன்!

வித்தியாசமான கதை களத்தில் படங்களை உருவாக்கும் கவுதம் வாசுதேவ் மேனன், கமலஹாசன், சூர்யா, சிம்பு உள்ளிட்ட  நடிகர்களுக்கு வெற்றிப்படங்களை கொடுத்தவர்.

கடந்த 2006 ஆம் ஆண்டு  கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் திரைக்கு வந்த படம், ‘வேட்டையாடு விளையாடு’ . இதில் டிஜிபி ராகவன் என்ற கேரக்டரில் கமல்ஹாசன் நடித்திருந்தார்.  ஜோதிகா, கமலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி  உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்த இந்த படம் சக்கை போடு போட்டது.

பல வருடங்களுக்குப் பிறகு இந்தப்படம் கடந்த மாதம் 23ம் தேதி புதுப்பொலிவுடன் மீண்டும் திரைக்கு வந்தது. இந்த நிகழ்வை  கவுதம் வாசுதேவ் மேனன், ஹாரிஸ் ஜெயராஜ், தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடினர்.

இந்த படத்தின் 2 ஆம் பாகம் விரைவில் தயாராக உள்ளது. இது குறித்து  கவுதம் வாசுதேவ் மேனன் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘எனது இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து திரைக்கு வந்த ‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் இரண்டாம்  பாகத்தின் கதையை கமல்ஹாசனிடம் சொன்னேன். அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ரிலீசுக்குப் பிறகு ‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் 2-வது பாகத்துக்கான பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளேன்’என்று தெரிவித்தார்.

கமல் நடித்த ’விக்ரம் -2 ‘ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். கமலே தயாரித்த இந்தப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி கமலுக்கு பெயரையும் புகழையும், பணத்தையும் ஒரு சேர பெற்றுக்கொடுத்தது. இதனால் தனது படங்களின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஆர்வமாக உள்ள கமல் ,இப்போது ‘இந்தியன் -2 ‘படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கல்யாணராமன் என்ற படம் கமலஹாசனின் மிகப்பெரிய வெற்றிப்படந்தான். அதன் அடுத்தப் பாகத்தை ஜப்பானில் கல்யாணராமன் என்ற பெயரில் எடுத்தார்கள்.கமல் நடிப்பில் உருவான அந்த படம் பெரிய அளவு வெற்றிப்பெறவில்லை என்பதும் நினைவு கூறத்தக்கது.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *