கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டம் இன்று தொடக்கம்..! நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார் மு.க.ஸ்டாலின்..!!

ஜூன்.2

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் இன்று தொடங்குகிறது. இதையொட்டி, மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார்.

திமுகவின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முனனாள் முதலமைச்சருமான கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டு அவரது 100-வது பிறந்த நாள் என்பதால், தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாக கொண்டாட திட்டமிடப்பட்டது. இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் தமிழக அரசு சார்பிலும், தி.மு.க. சார்பிலும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தையொட்டி, ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்கள் தலைமையில் விழாக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தி.மு.க. கொடி கம்பங்களை புதுப்பித்து கொடி ஏற்றுவது, மாவட்டம்தோறும் கருணாநிதிக்கு சிலைகள் அமைப்பது, 70 வயதுக்கு மேலான மூத்த கட்சி நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்குவது, தி.மு.க. குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது, கருத்தரங்கம்-பொதுக்கூட்டம், நூலகங்கள் தொடங்குவது என பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்டந்தோறும் திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

அதன் ஒரு பகுதியாக சென்னை புளியந்தோப்பில் தி.மு.க.வின் கூட்டணி கட்சியினர் பங்கேற்கும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறார்.

இவற்றிற்கான முன்னேற்பாடாக சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஜூன்2) கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நூற்றாண்டு விழாவுக்கான லோகோவை (இலச்சினை) வெளியிட்டு சிறப்புரை ஆற்றுகிறார். இந்த விழாவில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *