செப்டம்பர்,09-
முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைலையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம், ஒரு காலத்தில் கர்நாடக மாநிலத்தில் வலுவான கட்சியாக இருந்தது. தேவகவுடாவும், அவரது மகன் குமாரசாமியும் முதலமைச்சர்களாக பதவி வகித்துள்ளனர்.அங்கு பாஜக, கால் ஊன்றிய பின் , தேவகவுடா கட்சி கட்டெறும்பாகி விட்டது.
கடந்த சட்டசபை தேர்தலில் அவரது கட்சி படுதோல்விஅடைந்தது. இருப்பினும் ’மக்களவை தேர்தலில் நாங்கள் தனித்தே நிற்போம்-, கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை –ஐந்தாறு தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் போதும்’ என அண்மையில் தேவகவுடா தெரிவித்திருந்தார்.
ஆனால் தனது முடிவை அவர் திடீரென மாற்றிக்கொண்டுள்ளார். சில தினங்களுக்கு முன் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை தேவகவுடா சந்தித்து பேசினார். அப்போது கர்நாடக மாநிலத்தில் பாஜகவும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என முடிவானது.
28 மக்களவை தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் 4 தொகுதிகள், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.இதனை கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா தெரிவித்தார்.கோலார், ஹாசன், மாண்டியா, பெங்களூரு ஊரகம் ஆகிய தொகுதிகள் அந்த கட்சிக்கு வழங்கப்படும் என தெரிகிறது.
கடந்த தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் பாஜக 25 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக ஆதரவை பெற்று, மாண்டியா தொகுதியில் சுயேச்சையாக களம் இறங்கிய நடிகை சுமலதாவும் வெற்றி பெற்றார். காங்கிரஸ் மற்றும்மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் வென்றன.
கடந்த சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்ததால் பயந்து போன பாஜக இப்போது கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. பலன் கிடைக்குமா?
000