June 11, 13
கர்நாடகாவில் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தொடங்கி வைத்தார். அண்மையில் நடந்த கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலின்போது, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 2 ஆயிரம் உரிமைத் தொகை, அரசுப் பேருந்துகளில் பயணம் செய்ய மகளிர்களுக்கு இலசவம், அன்னபாக்யா திட்டத்தில் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் தலா 10 கிலோ இலவச அரிசி, 2 ஆண்டுகளுக்கு யுவநிதி திட்டத்தில் பட்டதாரிகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாயும், டிப்ளமோ படித்தவர்களுக்கு ஆயிரத்து 500 ரூபாயும் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிளை காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. ஆட்சியமைத்த சில நாட்களிலேயே அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், மேற்கண்ட 5 முக்கிய வாக்குறுதிகளுக்கும் கர்நாடக அமைச்சரவை கடந்த 2ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. அதன்படி, மகளிருக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் வழங்கும் சக்தி திட்டம் ஜூன் 11ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் நிலையில், இன்று கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் சக்தி யோஜனா திட்டம் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் ஆகியோர் அரசுப் பேருந்தில் பயணம் செய்து தொடங்கி வைத்தனர்.