May 12.2023
கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமைவது ஏறக்குறைய உறுதியாகியுள்ள நிலையில், ஜேடிஎஸ் கட்சியின் ஆதரவை பெற பாஜகவும், காங்கிரஸும் போட்டிப் போட்டு வருகின்றன.
கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாவதை முன்னிட்டு, மதசார்பற்ற ஜனதா தளக் கட்சியின் (ஜேடிஎஸ்) ஆதரவை பெற பாஜகவும், காங்கிரஸும் குமாரசாமியின் வீட்டின் முன்பு முண்டியடித்துக் கொண்டிருக்கின்றன. இந்த சூழலில், யாருக்கு ஆதரவு என்பதை நாளை அறிவிப்போம் என குமாரசாமி தரப்பு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய கர்நாடகா சட்டசபை தேர்தல் கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் ஆகிய கட்சிகளிடையே அங்கு மும்முனை போட்டி நடைபெற்றது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் காங்கிரஸே முன்னிலை வகிக்கும் என தெரிவித்துள்ளன.
அதே சமயத்தில், மேஜிக் நம்பரான 113-ஐ காங்கிரஸ் பிடிப்பது சிரமம்தான் என்றும் கூறப்படுகிறது. இதனால் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாமல் தொங்கு சட்டசபை தான் அங்கு ஏற்படும் எனவும் அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இதனால் ஜேடிஎஸ் கட்சியின் ஆதரவை யார் பெறுகிறார்களோ, அவர்களையே கர்நாடகா அரியணை வரவேற்கும் எனத் தெரிகிறது. இந்நிலையில், இதனை மெய்ப்பிக்கும் விதமாக ஜேடிஎஸ் கட்சித் தலைவர் குமாரசாமியின் பெங்களூர் இல்லத்தில் பாஜக, காங்கிரஸ் நிர்வாகிகள் காத்துக் கிடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஜேடிஎஸ் கட்சி மூத்த தலைவர்களிடம் காங்கிரஸ், பாஜக தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். இதனை ஜேடிஎஸ் கட்சி மூத்த தலைவர் தன்வீர் அகமது உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து என்டிடிவி ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், “பாஜகவும், காங்கிரஸும் தொடர்ந்து எங்களிடம் பேசி வருகின்றன. எங்கள் தயவு இல்லாமல் இரண்டு தேசியக் கட்சிகளும் கர்நாடகாவில் ஆட்சி அமைக்க முடியாது. யாருக்கு ஆதரவு தருகிறோம் என்பதை எங்கள் தலைவர் குமாரசாமி நாளை அறிவிப்பார்” என்றார். குமாரசாமி வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக சிங்கப்பூரில் தங்கியுள்ளார்.
ஏற்கனவே குமாரசாமியின் ஜேடிஎஸ் உடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்த காங்கிரஸ் இரு முறை மூக்குடைப்பட்டு திரும்பி இருக்கிறது. இருந்தபோதிலும், வேறு வழியில்லாமல் தற்போது மீண்டும் அக்கட்சியின் தயவை எதிர்பார்த்து காத்திருக்கிறது.