ஏப்ரல்.25
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 2,613 வேட்பாளர்கள் களம் காணவுள்ளனர். இதற்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
கர்நாடகாவில் 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணி கடந்த 13-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 3 ஆயிரத்து 632 வேட்பாளர்கள் 5 ஆயிரத்து 102 மனுக்களை தாக்கல் செய்தனர்.
கடந்த 21ம் தேதி இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. அதில், 678 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 3 ஆயிரத்து 44 மனுக்கள் ஏற்கப்பட்டன. இதையடுத்து தேர்தல் ஆணையம் இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் சட்டசபை தேர்தல் களத்தில் 2,613 வேட்பாளர்கள் உள்ளனர். இதில் 2,427 பேர் ஆண்களும், 184 பேர் பெண்களும், 3-ம் பாலினத்தினர் 2 பேரும் அடங்குவர்.
கட்சிகளைப் பொறுத்தவரையில் பா.ஜனதா வேட்பாளர்கள் 224 பேரும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 223 பேரும், ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் 207 பேரும், ஆம் ஆத்மி வேட்பாளர்கள் 209 பேரும், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் 133 பேரும், 918 சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். பெங்களூருவில் உள்ள 28 தொகுதிகளில் மொத்தம் 704 வேட்பாளர்கள் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.