கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அதில், மருத்துவர்கள், ஐ.பி.எஸ் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், 31 முதுகலைப்பட்டதாரிகள், 8 பெண்கள் உட்பட மொத்தம் 189 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் 222 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல், மே 10ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கி, ஏப்.20ம் தேதி வரை நடைபெறுகிறது. ஏப்ரல் 21ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படவுள்ளது. ஏப்.24ம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக 189 வேட்பாளர்களின் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா, ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிடுகிறார். முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஷிகாம்வ தொகுதியில் போட்டியிடுகிறார்.
மேலும், இந்த முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 52 புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் 32 பேரும், பட்டியல் இனத்தவரில் 20 பேரும், பட்டியல் பழங்குடியினரில் 16 பேரும் பாஜக வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இது குறித்துப் பேசிய பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங், இந்த வேட்பாளர் பட்டியலில் மருத்துவர்கள், ஐ.பி.எஸ் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், 31 முதுகலைப்பட்டதாரிகள், 8 பெண்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறினார்.
இதனிடையே, ஒப்பந்ததாரர் மரணம் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஈஸ்வரப்பா, இந்த முறை தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.