ஏப்ரல்.20
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் புலிகேசி தொகுதியில் நெடுஞ்செழியன் போட்டியிடுவார் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் டி.அன்பரசனை வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநிலத்தில் மே மாதம் 10-ந்தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறுது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ், பாஜக இடையே நேரடிப்போட்டி நிலவும் நிலையில், தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலும் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது என அ.தி.மு.க.செய்தது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அ.தி.மு.க.வின் விருப்பம் பா.ஜ.க.வுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், பாஜக வெளியிட்ட வேட்பாளர் இறுதிப்பட்டியலில் அ.தி.மு.க.வுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதுதொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகளுடன், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
அதில் கர்நாடக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவது என்று முடிவு எடுக்கப்பட்டு, அதன்படி, கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் வாழும் புலிகேசி நகர் தொகுதியில் கர்நாடக மாநில அ.தி.மு.க. அவைத்தலைவர் டி.அன்பரசன் போட்டியிடுவார் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளரை ஓ.பன்னீர்செல்வமும் இன்று அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை அறிவித்த அதே புலிகேசி நகர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் நெடுஞ்செழியன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருப்பது தமிழக மற்றும் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.