மே.1
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படவுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெறவுள்ளது. இதில், காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதாதள கட்சி உள்ளிட்ட கட்சிகள் களம் காண்கின்றன. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, தேர்தல் பரப்புரையானது மாநிலம் முழுவதும் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், பாஜக-வின் தேர்தல் அறிக்கையை கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா இன்று வெளியிடுகிறார். பெங்களூருவில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மூத்த தலைவர் எடியூரப்பா, கட்சியின் இணை தேர்தல் பொறுப்பாளர் அண்ணாமலை உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
இந்த தேர்தல் அறிக்கையில், இளைஞர்கள் நலன், கட்டமைப்பு மேம்பாடு, மகளிர் மேம்பாடு உள்ளிட்ட அம்சங்களும், இளைஞர்கள் மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவிகளுக்கான சிறப்புத் திட்டங்கள் உள்ளிட்ட பல அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.