மே.10
கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதையொட்டி, பெங்களூரு உட்பட மாநிலம் முழுவதும 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
224 தொகுதிகளை உள்ளடக்கிய கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று கடந்த மார்ச் 29-ந்தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து கர்நாடகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுககான பிரச்சாரம் தீவிரமானது. பாஜக, காங்கிரஸ் மற்றும் மதசார்ப்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடையே இந்தத் தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது. இதுதவிர, ஆம்ஆத்மி, தேதியவாத காங்கிரஸ் மற்றும் ஒவைசியின் AIMIM உள்ளிட்ட கட்சிகளும் சில தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. இந்தக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சிகளின் தலைவர்கள் மாநிலம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு மக்களிடையே வாக்குச்சேகரித்தனர்.
இந்த நிலையில், இன்று காலை 224 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் 37 ஆயிரத்து 777 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 58 ஆயிரத்து 545 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள இந்த வாக்குப்பதிவையொட்டி, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், அத்துடன் வாக்குப்பதிவின்போது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தவிர்க்க பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அதன்படி, 5 பேருக்கு மேல் ஒன்றாக செல்ல கூடாது, போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலம் நடத்த தடை என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு தொடங்கிய நேரத்தில் இருந்தே மக்கள் நீண்டவரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்துவருகின்றனர். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இந்தத் தேர்தலில் 224 தொகுதிகளில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையைப் பெற 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மாலை வரை பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வரும் 13ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.