மே.18 2023
கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வரும் 20 ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறும் விழாவில் பதவி ஏற்கின்றனர்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 223 தொகுதிகளில் போட்டியிட்டு 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது. இதனை தொடர்ந்து பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் காங்கிரஸ் மேலிடத்திற்கு வழங்கி ஒரே வரியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து மேலிட பார்வையாளர்கள், ஒவ்வொரு எம்.எல்.ஏ.விடமும் தனித்தனியாக கருத்துகளை கேட்டு அறிந்தனர். யாரை முதலமைச்சர் ஆக்கலாம் என்று அவர்கள் கருத்துகளை தெரிவித்தனர். அந்த கருத்துகளை ஒருங்கிணைத்து அறிக்கை தயாரித்த மேலிட பார்வையாளர்கள், இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் தாக்கல் செய்தனர். கர்நாடகாவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒருமித்த கருத்துக்கு வந்தார்.
பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு சித்தராமையாவுக்கு கிடைத்தது. இதையடுத்து முதலமைச்சர் பதவி விவகாரத்தில் இழுபறி நிலை முடிவுக்கு வராததால் கர்நாடக அரசியலில் பரபரப்பு நீடித்து வந்த நிலையில், கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவும, துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மே 20-தேதி பெங்களூருவில் பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.