மே 17,2023
கர்நாடக முதலமைச்சர் யார் என்பதை காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களை பிடித்து ஆட்சியை பிடித்துள்ள காங்கிரஸ் கட்சி, முதலமைச்சரை தேர்ந்தெடுக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், இது தொடர்பாக விவாதிக்க நேற்று முந்தினம் எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் முதலமைச்சர் யார் என்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்ய முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தனித்தனியாக எம்எல்ஏக்களிடம் கருத்து கேட்கப்பட்டு, அதன் அடிப்படையில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் மேலிடத்திற்கு அறிக்கை சமர்பித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் முடிவுகளை காங்கிரஸ் தலைமை அறிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.இதையடுத்து புதிய முதலமைச்சர் யார் என்பது குறித்து தேர்வு செய்ய டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ராகுல்காந்தி உள்ளிட்டோரும் கலந்துகொண்ட நிலையில், நேற்று டெல்லி சென்றுள்ள சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகிய இருவரையும் மல்லிகார்ஜூன கார்கே தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தினார். கர்நாடக முதலமைச்சரை அறிவிப்பதில் 2 நாட்களாக இழுபறி ஏற்பட்ட நிலையில், இன்று இறுதி முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.