கற்பகம் படத்தில் எம்.ஜி.ஆர். நடிக்க மறுத்தது ஏன் ?

எம் ஜி ஆர் படங்களை பொருத்தவரை, அவர்தான் , தனது படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களையும் முடிவு செய்வார். அவரது, இந்த பிடிவாதம், கே எஸ் கோபாலகிருஷ்ணனிடம் பலிக்கவில்லை.

ஏன் ? பார்க்கலாம்.

குடும்பப்பாங்கான படங்களை வழங்குவதில் கில்லாடியான கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், 1962 ஆம் ஆண்டு வெளியான சாரதா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்.
இதனை அடுத்து தெய்வத்தின் தெய்வம் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த இரு படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றன.கல்லாவையும் நிரப்பின..

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய 3 –வது படம் கற்பகம். ஜெமினி கணேசன் – சாவித்ரி இணைந்து நடித்த இந்த படத்தில் எஸ்.வி.ரங்காராவ் முக்கிய கேரக்டரில் ( மாமனார் ) நடித்திருந்தார்.

இந்த படத்தை இயக்க முடிவு செய்த கே.எஸ். கோபாலகிருஷ்ணன், முதலில் இந்த கதையை எம்.ஜி.ஆரிடம் தான் கூறினார். கதையை கேட்ட எம் ஜி ஆருக்கு பிடித்து போனது, நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆனால் அந்த மாமனார் கேரக்டரில் ‘சகலகலா வல்லவன்’டி.எஸ். பாலையா நடிக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர் விரும்பினார். கே.எஸ்.கோபாலகிருஷ்ணனோ, எஸ்.வி.ரங்காரவ் தான் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. அந்த படத்தில் இருந்து எம்.ஜி.ஆர், விலகிக்கொண்டார்.

அந்த நேரத்தில், கே.எஸ்.கோபால கிருஷ்ணனுக்கு இன்னொரு சோதனையும் காத்திருந்தது. கற்பகம் படத்தை தயாரிக்க இருந்த நிறுவனத்திற்கு ‘பைனான்ஸ்’பிரச்சினை ஏற்பட்டதால், படத்தை ‘டிராப்’ செய்து விட்டார்கள்.

ஆனால் அந்த படத்தை உருவாக்கியே தீர வேண்டும் என்பதில் வைராக்கியமாக இருந்தார், கோபால கிருஷ்ணன். அவரே படத்தை தயாரிக்க விரும்பி, ஆங்காங்கே பணத்தை புரட்டினார்.
ஒரு சில மாதங்கள் கழித்து கற்பகம் படத்துக்கு மீண்டும் உயிர் வந்தது. இந்த படத்தை மீண்டும் தொடங்கிய கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், தயாரிப்பாளராகவும்,இயக்குநராகவும் இரட்டை குதிரையில் சவாரி செய்தார்.

எம்.ஜி.ஆருக்கு பதிலாக ஜெமினி கணேசனை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தார். சாவித்ரி, நாயகி என்பதிலும் ரங்காராவ் மாமனார் என்பதிலும் மாற்றம் செய்யவில்லை.
படம் பிய்த்துக்கொண்டு ஓடியது. இந்த படத்தில் கிடைத்த, லாபத்தில்தான், கோபாலகிருஷ்ணன், சாலிகிராமத்தில் ‘கற்பகம் “ ஸ்டூடியோவை ஆரம்பித்தார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *