கலவரம் ஓயாத மணிப்பூரில் ராஜினாமா நாடகம்… படித்து ரசியுங்கள்.

வட  கிழக்கு மாநிலமான  மணிப்பூர் இரண்டு மாதமாக பற்றி எரிகிறது. இரு குழுக்கள் ஆயுதங்களுடன் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்கிறார்கள்.வன்முறையை ஒடுக்க முடியாமல் ராணுவம் திணறிக்கொண்டிருக்கிறது.

என்ன காரணம்?

மியான்மருடன் 400 கி.மீ.எல்லையை பகிர்ந்து கொள்ளும் மணிப்பூர் மாநிலம், மலைகளும், பள்ளத்தாக்குகளும் சூழ்ந்த பகுதி.

மெய்திகள் எனும் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர்.மொத்த மக்கள் தொகையில் அவர்கள் 53 சதவீதம் பேர். அதற்கு அடுத்து குகி சமூகத்தினர்  30 சதவீதம் பேர் வாழ்கிறார்கள். எஞ்சியோர், நாகா  உள்ளிட்ட சமூகத்தினர் ஆவர்.

குகி மற்றும் நாகா மக்கள், அந்த மாநிலத்தில் பழங்குடியினராக அரசால்அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அரசு சலுகைகளை அனுபவித்து வருகிறார்கள்.

பழங்குடியின இடஒதுக்கீட்டை பயன்படுத்தி அவர்கள், அரசாங்க உயர் பதவிகளில் இருப்பது, மெய்தி சமூகத்தினர் மத்தியில் நாளாவட்டத்தில்  அதிருப்தியை ஏற்படுத்தியது.

‘குகி மற்றும் நாகா சமூகத்தினர் போன்று தங்களுக்கும் பழங்குடியினர் அந்தஸ்து அளிக்க வேண்டும்’ என மெய்திகள் குரல் எழுப்பினர்.பல்வேறு போராட்டங்களும் நடத்தினர்.

இந்த விவகாரம் குறித்து விசாரித்த உயர்நீதிமன்றம்,மெய்தி சமூகத்தினருக்கும் பழங்குடியினர் அந்தஸ்து அளிக்க மணிப்பூர் அரசுக்கு பரிந்துரை செய்தது.

இதனால், தங்கள் உரிமைகள் பாதிக்கப்படும் என கோபம் கொண்ட குகி மற்றும் நாகா சமூகத்தினர் கடந்த மே மாதம் 3 ஆம் தேதி பேரணி நடத்தினர்.

இந்த பேரணியில் வன்முறை ஏற்பட்டது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வீடுகள், கடைகள் எரிக்கப்பட்டன.

மெய்திகள் ஒரு புறம் அணிவகுத்து நிற்க, அவர்களுக்கு எதிராக நாகாக்களும் குகி மக்களும் ஒன்று திரண்டுள்ள நிலையில் இரண்டு மாதமாக கலவரம் ஓயவில்லை. கலவரத்தில் இரு தரப்பிலும் 131 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

முதலமைச்சரின் நாடகம்

மணிப்பூர் மாநிலத்தில் முதலைமைச்சராக பா.ஜ.க.வை சேர்ந்த பைரேன் சிங் உள்ளார்.அவர் மீது பிரதமர் மோடி அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டதால்  முதலமைச்சர் பதவியில் இருந்து பைரேன்சிங் விலகப்போவதாக மணிப்பூரில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழ் நேற்று செய்தி வெளியிட்டது. ஆளுநரிடம் பதவி விலகல் கடிதம் கொடுக்க இருப்பதாகவும் செய்தியில் கூறப்பட்டிருந்தது.

இதனையடுத்து இம்பாலில் உள்ள பைரேன்சிங் வீட்டு முன்பு,அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டனர். ராஜினாமா செய்தி உண்மைதானா? என மூத்த அமைச்சர்களிடம் கேட்டனர்.அப்போது, பைரேன்சிங் ராஜினாமா கடிதத்தை அவர்களிடம், அமைச்சர்கள் காண்பித்தனர்.

ஆத்திரம் அடைந்த முதலமைச்சரின் ஆதரவாளர்கள் ,அந்த கடிதத்தை பிடுங்கி கிழித்தெறிந்தனர். ஆளுநர் மாளிகைக்கு பைரேன்சிங் செல்ல முடியாதபடி மனிதசங்கிலி அமைத்தனர். சாலைகளையும் மறித்து நின்றனர். இந்த களேபரம் சில மணிநேரம் நீடித்தது.

இதனை தொடர்ந்து பைரேன்சிங் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,இந்த இக்கட்டான சூழலில் நான் பதவியில் விலக மாட்டேன்’ என குறிப்பிட்டிருந்தார் .பின்னர் அவரது ஆதரவாளர்கள் கலைந்து சென்றனர்.

முதலமைச்சரின் ராஜினாமா நாடகத்தால் தலைநகர் இம்பாலில் பலமணி நேரம் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.

இதை மீறி நாம் சொல்வதற்கு எதுவுமில்லை.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *