June 06, 23
சென்னை கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்டுள்ள உதவி பேராசிரியர் ஹரி பத்மனுக்கு ஜாமீன் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் இயங்கி வரும் ருக்மணிதேவி நுண்கலைக் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் பலருக்கும் பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. மாணவிகளுக்கு தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் ஹரி பத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, 2 நாட்கள் மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
அந்தவகையில் 2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரை கலாஷேத்ரா கல்லூரியில் பயின்ற கேரளாவைச் சேர்ந்த முன்னாள் மாணவி பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், ஏப்ரல் 3ம் தேதி கைது செய்தனர்.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரி பத்மன் ஜாமீன் கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்க நீதிபதி மறுப்பு தெரிவித்தார். இதனையடுத்து ஹரி பத்மன் சென்னை உயநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், தற்போது சைதாப்பேட்டை நீதிமன்றம் ஹரிபத்மனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை அவர் திரும்பப் பெற்றார்.