சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் அத்துமீறல்கள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது தொடர்பாக மாணவிகளிடம் மாநில மனித உரிமை ஆணையம் இன்று விசாரணை நடத்திவருகிறது.
மத்திய அரசின் கலாசாரத் துறையின் கீழ் உள்ள கலாஷேத்ரா நிறுவனம் நடத்தி வரும் ருக்மணி தேவி கவின் கலைக் கல்லூரி சென்னை திருவான்மியூரில் செயல்பட்டுவருகிறது. இங்கு பணியாற்றும் 4 ஊழியர்கள், பாலியல் தொல்லை தருவதாக குற்றம்சாட்டிய மாணவிகள், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரும் சர்ச்சையாக வெடித்த இந்த விவகாரம் தொடர்பாக மாநில மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி வந்த நிலையில், மாநில மனித உரிமை ஆணைய எஸ்.பி. மகேஷ்வரன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று கலாஷேத்ராவில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கல்லூரி இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன், துணை இயக்குநர் பத்மாவதி, முதல்வர் பகல ராம்தாஸ் ஆகியோரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், 2வது நாளான இன்று மாணவிகளிடம், இந்த விவகாரம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்துகிறது. இதனிடையே, பாலியல் தொல்லை புகாரில் கைதுசெய்யப்பட்ட நடனத்துறை உதவி பேராசிரியர் ஹரி பத்மனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் மாணவி அளித்த புகாரின் பேரில், கைதான ஹரி பத்மன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், ஜாமீன் கோரி ஹரி பத்மன் தாக்கல் செய்த மனுவை சைதாப்பேட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.