“கலாஷேத்ரா கல்லூரியில் நான் படித்தபோது எனக்கு எந்தப் பாலியல் தொல்லையும் இருந்ததில்லை. இதை அதிகாரத்துக்காகச் செய்யப்படும் சூழ்ச்சியாகவே பார்க்கிறேன்.” – `பிக் பாஸ்’ அபிராமி
சென்னை கலாஷேத்ரா கல்லூரியில், மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் நடன ஆசிரியர் ஹரி பத்மன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இந்த விவகாரம் தமிழக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், கலாஷேத்ரா கல்லூரியின் முன்னாள் மாணவியும், நடிகையுமான `பிக் பாஸ்’ அபிராமி ஹரி பத்மன் மீதான குற்றச்சாட்டில் அரசியல் சூழ்ச்சி இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இது குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கலாஷேத்ரா கல்லூரியில் நான் படித்தபோது எனக்கு எந்தப் பாலியல் தொல்லையும் இருந்ததில்லை.
நான் படித்தபோது இயக்குநராக இருந்த லீலா சாம்சன் மீதும் இதுபோல பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்கள். அப்போதும் மாணவர்களிடம் பேசி, அழுது, கட்டாயப்படுத்தி லீலா சாம்சன் மீதான குற்றச்சாட்டுக் கடிதத்தில் கையெழுத்து வாங்கினார்கள். ஆனால், அந்தச் சூழ்ச்சியை லீலா சாம்சன் தைரியமாக எதிர்கொண்டு வென்று நிரூபித்தார். அதே போன்ற சூழ்ச்சிதான் இப்போதும் நடக்கிறது. சமீபத்தில் நடன ஆசிரியர் ஹரி பத்மனிடம் இந்தக் கல்லூரியை முன்னெடுத்துச் செல்லுமாறு ஓய்வுபெற்ற கலாஷேத்ரா பேராசிரியர் ஜனார்தனன் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகே ஹரி பத்மன் மீதான இந்தக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அதனால், இதை அதிகாரத்துக்காகச் செய்யப்படும் சூழ்ச்சியாகவே பார்க்கிறேன்.
இதற்குப் பின்னணியில் நிர்மலா நாகராஜ், நந்தினி ஆகிய கலாஷேத்ரா கல்லூரியின் பேராசிரியர்கள் இருக்கிறார்கள். இந்தப் பிரச்னை எழுந்தபோது ஹரி பத்மனுக்கு எதிராகப் பேசக் கூறி, என்னுடைய நண்பர்கள் மூலம் தூண்டப்பட்டேன். இதேபோலத்தான் அவருக்கு எதிராக அனைத்து மாணவிகளையும் பேசத் தூண்டியிருப்பார்கள். அவர்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு ‘அடுத்த இயக்குநர் யார்?’ என்ற பதவிக்காக வைக்கப்பட்டிருக்கிறது என்றே சந்தேகிக்கிறேன். இதை வெளிப்படையாகப் பேச எனக்கு எந்த பயமும் இல்லை. மேலும், அங்கு சாதிரீதியான பாகுபாடு இருப்பதாகவும் மாணவிகள் கூறினார்கள். அதற்கும் வாய்ப்பில்லை. நான் 2010 முதல் 2015 வரை படித்திருக்கிறேன்.
அப்போது நடக்காத ஒரு விஷயம் திடீரென நடக்கிறதென்றால் எனக்குச் சந்தேகம் வலுக்கிறது. நான் மாணவிகளைச் சந்தித்துப் பேச வேண்டும். அப்போதுதான் உண்மையில் என்ன நடந்தது எனத் தெரியவரும். என்னை ஹரி பத்மனுக்கு எதிராகப் பேசக் கூறிய ஆடியோவை ஆதாரமாக காவல்துறையிடம் கொடுக்கத்தான் காவல் ஆணையரைச் சந்தித்தேன். மேலும், இந்த வழக்கில் என்னால் எந்த வகையில் உதவ முடியும் என்பதை அறிந்துகொள்ளவும் முயன்று வருகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.