சென்னை கலாஷேத்ரா நாட்டியப் பள்ளி மீதான பாலியல் புகார் வழக்கில் ஆசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டு உள்ளார். மாதவரத்தில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த அவர்,திங்கள் கிழமை அதிகாலை போலிசால் சுற்றிவளைக்கப்ட்டார். பலத்த பாதுகாப்புடன் சைதாப்பேட்டை நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவரை ஏப்ரல் 13 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதன் பிறகு ஹரி பத்மன் சிறைக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டு உள்ளார்.
கடந்த பத்து நாட்களாக பெரும் பரப்பை ஏற்படுத்திய விவகாரத்தில் கலாஷேத்ரா நிர்வாகம் முதன் முறையாக நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அதாவது மாணவிகளால் புகார் கூறப்பட்ட ஹரிபத்மன் உட்பட நான்கு ஆசிரியர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த சூழலில் கலாஷேத்ரா விவகாரம் குறித்து தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் தலைமைச் செயலாளரை சந்தித்து அறிக்கை ஒன்றை கொடுத்து உள்ளார்.
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா நாட்டியக் கல்லூரி. ஒன்றிய அரசின் கலாச்சாரத் துறையின் கீழ் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவிகள் பயின்று வருகின்றனர். அவர்கள் கடந்த வாரத்தில் உதவி பேராசிரியர் ஹரிபத்மன், உதவியாளர்கள் சாய்கிருஷ்ணன், சஞ்ஜித் லால், ஸ்ரீநாத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, உள்ளிருப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
தொடர்ந்து முன்னாள் மாணவி ஒருவர் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் அவர், உதவி பேராசிரியர் ஹரிபத்மன் பாலியல் தொல்லை கொடுத்ததை தாங்க முடியாமல் கல்லூரியில் இருந்து பாதியில் வெளியேறியதாக குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட ஹரிபத்மன், மாதவரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். தொடர்ந்து போலிஸ் நடத்தும் விசாரணையில் மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.