செப்டம்பர்,15-
கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக.,பல இலவசங்களை அறிவித்தது .பெண்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு பிரதானமானது. அதனை நிறைவேற்றும் பணிகள் சில மாதங்களாக தீவிரமாக நடைபெற்றது.அந்த திட்டத்துக்கு ‘கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்’ என பெயர் சூட்டப்பட்டது.
உரிமை தொகை வாங்குவதற்கு ஒரு கோடியே 63 லட்சம் பெண்கள் விண்ணப்பித்தனர்., தகுதி இல்லாத சுமார் 56 லட்சத்து 50 ஆயிரம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. முதலமைச்சர் ஸ்டாலின் காஞ்சீபுரத்தில் இந்த திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார்ஆனாலும் ஏராளமான பெண்களுக்கு வியாழக்கிழமையே ஆயிரம் ரூபாய் போய் சேர்ந்து விட்டது.அவர்கள் வங்கி கணக்குக்கு இந்த பணம்
அனுப்பப்பட்டு, இது குறித்த குறுஞ்செய்தியும் பயனாளிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனால் பெண்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். ஒரே நேரத்தில் அனைத்து பயனாளிகளுக்கும் பணத்தை அனுப்புவதில் தொழில்நுட்ப சிக்கல் இருந்ததால் முன் கூட்டியே அனுப்பி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ’முதலமைச்சர் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கும் போது , பயனாளிகள் அனைவர் கணக்கிலும் பணம் வரவு வைக்கப்பட்டிருக்கும்’ என்றும் அவர்கள் கூறினர்.அதாவது ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கும் இன்றே ஆயிரம் ருபாய் கிடைத்து விடும். ஏடிஎம்கள், படாதபாடு படப்போகிறது.