திருவாரூர் விழாக்கோலம் பூண்டு உள்ளது.செவ்வாய்க்கிழமை கலைஞர் கோட்டம் திறக்கப்படும் நிகழ்ச்சிக்காக முதலமைச்சர் மு.க.ஸடாலின் முகாமிட்டு உள்ளார்.
சென்னையில் இருந்து ஞாயிறு அன்று விமானத்தில் திருச்சி சென்ற ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் திருவாரூர் சென்று சன்னதி தெருவில் உள்ள தமது வீட்டில் தங்கினார்.கலைஞரும் திருவாரூர் சென்றால் இந்த வீட்டில்தான் தங்குவார். காலையில் கலைஞர் கோட்டத்தைப் பார்வையிட வீட்டை விட்டு வெளியில் வந்த அவர் வாசல் முன் காத்திருந்த பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று கொண்டார்.
திருவாரூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் ஆறாவது கிலோ மீட்டரில் காட்டூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு கலைஞர் முன்பே ஆறு ஏக்கர் நிலத்தை வாங்கி இருந்தார். அங்கு விவசாயமும் நடை பெற்று வந்தது. அந்த நிலம் தயாளு அம்மாள் அறக்கட்டளையின் கீழ் கொண்டு வரப்பட்டு அங்கு கலைஞர் கோட்டம் ரூ 12 கோடி செலவில் கட்டப்பட்டு உள்ளது.
கலைஞரின் உருவச்சிலை, அவரது தந்தையான முத்து வேல் பெயரில் நூலகம், கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் அருங்காட்சியகம் மற்றும் கூட்ட அரங்கு ஆகியவை கட்டப்பட்டு உள்ளன..
திறப்பு விழாவை முன்னிட்டு பட்டிமன்றம்,கவியரங்கம், பாட்டரங்கம் ஆகிய நிகழச்சிகளும் நடை பெறுகின்றன. செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு திருவாரூர் சகோதரிகளின் இசையுடன் விழா தொடங்குகிறது. கவிஞர் வைரமுத்து கவியரங்கத்திற்கு தலைமை வகிக்கிறார். கவிஞர்கள் பா.விஜய், கபிலன், ஆண்டாள் பிரியதர்ஷ்ணி, தஞசை இனியன் ஆகியோர் இதில் பங்கேற்கின்றனர்.
அதன் பிறகு பட்டிமன்றம். மக்கள் மனதை பெரிதும் கவர்ந்தது முத்தமிழ் அறிஞர் கலைஞரின் எழுத்தே, பேச்சே என்ற தலைப்பில் நடைபெறும் பட்டிமன்றத்துக்கு பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமை வகிக்கிறார். இதில் எழுத்தே என்ற தலைப்பில் புலவர் ராமலிங்கம், மாது , பராதி பாஸ்கர் ஆகியோரும் பேச்சே என்ற தலைப்பில் திருவாரூர் சண்முக வடிவேல், கவிதா ஜாவகர், ராஜா ஆகியோரும் பேசுகின்றனர்.
மாலை 3.30 மணிக்கு மாலதி லட்சுமணன் குழுவினரின் பாட்டரங்கம். அது முடிந்த பின் கலைஞர் கோட்டம் திறப்பு விழா. தயாளு அம்மாள் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டா மோகன் காமேஷ்வரன் அனைவரையும் வரவேற்றுப் பேசுகிறார்.
திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் விழாவுக்கு தலைமை வகிக்கிறார். பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றுகிறார். பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவர் முத்து வேல் நினைவு நூலகத்தை திறந்து வைக்கிறார்.
விழாவில் அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் பேச உள்ளனர்.இதனால் பாரதீய ஜனதாவிற்கு எதிரான கருத்துகள் அனலைப் பரப்பும் என்ற கருத்து நிலவுகிறது.
விழாவை முன்னிட்டு திருச்சி மண்டல ஜ.ஜி. கார்த்திகேயன், தஞ்சாவூர் டி.ஜ.ஜி. ஜெயச்சந்திரன், திருவாரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் பலத்த போலிஸ் பாதுகாப்பு செய்யப்பட்டு உள்ளது.. திருவாரூர் மாவட்டத்தில் டிரோன்கள் பறக்கத் தடை விதித்து உள்ளனர்.
பீகார் முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் திருச்சிக்கு விமானத்தில் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருவாரூர் வர உள்ளனர். ஹெலிகாப்டர் இறங்குவதற்கான தளம் அமைக்கப்பட்டு உள்ளது.
000