சென்னை மெரினா கடற்கரையி்ல் கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைப்பதை தொடர்பான வழக்கை தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தள்ளிவைத்து விட்டது.
இந்த வழக்கு மீது புதன் கிழமை விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்த மாதம் 23 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மெரினா கடற்கரையில் கலைஞர் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு தடைகோரியும், ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள நினைவிடங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் விதிமீறல்களை ஆராயக்கோரியும் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ராம்குமார் ஆதித்யன் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதற்கு மத்திய, மாநில அரசுகளின் சுற்றுச்சூழல், மீன்வளத்துறை உள்ளிட்ட 10 துறைகள் பதில் மனு தாக்கல் செய்ய தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
இதனை ஏற்று தமிழ்நாடு பொதுப்பணி துறை , தமிழ் வளர்ச்சி துறை ஆகியவை மட்டுமே பதில் மனு தாக்கல் செய்துள்ளன. மற்ற துறைகளும் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி இருந்த தீர்ப்பாயம், வழக்கை ஏப்ரல் 19 ஆம் தேதி விசாரிப்பதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் வழக்கு, மே மாதம் 23 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தீர்ப்பாயம் தெரிவித்து உள்ளது.