தமிழகத்தில் உள்ள சொற்பமான சுற்றுலா மையங்களில் குற்றாலம், நினைத்தாலேயே மனதை குளிர வைக்கும் இடம்.
ஜுன் மாதம் ஆரம்பித்து ஆகஸ்டு வரை சீசன், களை கட்டும். விடிய விடிய நனைந்தாலும் ஜலதோஷம் போன்ற தொந்தரவுகளை அண்ட விடாத இதமான சாரல், குற்றாலத்துக்கு மட்டுமே சொந்தம். கொட்டும் அருவிகளில் மூலிகை குணம் இருப்பதால், இவற்றில் குளிப்போருக்கு நோய்கள் பறந்து போகும். ஐந்தாறு அருவிகள் இருந்தாலும் மெயின் அருவி, ஐந்தருவி,பழைய அருவிகள் மட்டுமே சுற்றுலா பயணிகளின் சொர்க்கபூமி.
கே.பாலசந்தர் படங்களின் பெரும்பாலான படச்சுருள்கள் குற்றாலத்தில் நனைந்தவை. மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள குற்றாலத்தில் இந்த ஆண்டு சற்று தாமதமாகவே சீசன் ஆரம்பமாகியுள்ளது. ஆனாலும் அமர்க்களமான ஆரம்பம். உடம்பை தழுவி செல்லும் தென்றலும், இணையாக பொழியும் சாரல் துளிகளும் ஆனந்தமான அனுபவம்.
உள்ளூர் மக்களுடன் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தெல்லாம் மக்கள் திரள் குற்றாலத்தை மொய்க்க ஆரம்பித்துள்ளனது. சனி, ஞாயிறு போன்ற விடுமுறை தினங்களில் திருவிழா கூட்டம். ஆனாலும் அருவிகளில் குளிப்பதற்கு அதிர்ஷ்டம் வேண்டும்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்தால், அருவிகளில் காட்டாறுகள் குதிக்கும். பாறைகளே தாங்க முடியாத வீச்சு இருக்கும். அப்போது அருவிகளை தரிசிக்கலாம். தலை நீட்ட முடியாது. ஓரிரு நாள் பொறுத்திருந்தால் குளிக்கும் பாக்கியம் கிடைக்கும்.
எனவே வெளியூர் மக்கள் , மேற்கு தொடர்ச்சி மலையின் மேகங்களை கணிக்கும் வானிலை அறிவிப்பை பார்த்து விட்டு குற்றாலத்துக்கு பஸ்,ரயில் ஏறுவது உசிதம்.