விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பாமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை, எக்கியர்குப்பம் பகுதி மீனவர்கள் அருந்தியுள்ளனர். இதனையடுத்து மீனவர்கள் மயங்கி விழுந்து உயிருக்கு போராடியுள்ளனர். அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு முண்டியம்பாக்கம், மரக்காணம் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தோரின் உடலுக்கு அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் என மொத்தம் 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட 14-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், கள்ளச்சாராயம் குடித்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், எ.வ.வேலு மற்றும் டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோரும் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்தனர்.
தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு , கள்ளக்குறிச்சி ஆகிய 4 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பிக்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் கூறியதாவது:
”எக்கியர்குப்பத்தில் விஷசாராயம் குடித்தவர்கள் ஜிப்மர், முண்டியம்பாக்கம் மருத்துவமனகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விசாரணையில் மெத்தனால் சாராயத்தினால் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இதே போன்று துயர சம்பவம் ஏற்பட்டுள்ளது. இந்த இரு சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு, தலா ரூ.10 லட்சம் வழங்கவும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தொழிற்சாலைகளில் சாராயம் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த இரு சம்பவமும் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்படும்”.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.