மே 17,2023
கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 4 வாரத்திற்குள் தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை தலைவர் பதிலளிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் மருத்துவமனைகளில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதேபோல் செங்கல்பட்டிலும் சிகிச்சை பெற்று வருபவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். பின்னர் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா மற்றும் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதேபோல், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் பணியிட மாற்றம் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், கள்ளச்சாராயம், விஷச்சாராயம் விற்பனையை தடுக்க தமிழ்நாடு அரசு தவறியதாக குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 4 வாரத்திற்குள் தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை தலைவர் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், இந்த கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை அளிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.