கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தை கீழ் ஆய்வு மேற்கொள்வதற்காக விழுப்புரம் சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செங்கல்பட்டு அருகே தொழுநோய் அரசு மறுவாழ்வு இல்லத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தை துவக்கி வைத்து வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்து வருகிறார். அதன்படி, இன்று கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கிறது.
அந்த வகையில், இன்று மாலை காவல்துறை அதிகாரிகளுடன் சட்ட ஒழுங்கு குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். சட்ட ஒழுங்கு ஆய்வு கூட்டத்திற்கு முன்னதாக வணிகர்கள், விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுக்களுடன் கலந்து ரையாடலை நிகழ்த்தி கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.
இந்த நிலையில், இன்று காலை முதற்கட்டமாக விழுப்புரம் செல்லும் வழியில், செங்கல்பட்டு மாவட்டம் பரனுர் சுங்கச்சாவடி அருகே அமைந்துள்ள தொழுநோய் அரசு மறுவாழ்வு இல்லத்திற்கு நேரில் சென்ற தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், அங்குள்ளவர்களின் குறைகளை கேட்டு அறிந்து அவர்களுக்கு நலத்திட்ட
உதவிகளை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் , சிறு குறு நடு தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் த.மோ அன்பரசன் , செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி உள்ளிட்ட எம்எல்ஏக்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகள் என பலரும் உடன் இருந்தார்கள்
இந்த ஆய்வை முடித்துவிட்டு சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியில் காரில் பயணம் மேற்கொண்டு விழுப்புரம் சென்று கள ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு இடையே மதுராந்தகம் பகுதியில் உள்ள புதியதாக கட்டப்பட்டு வரும் மதுராந்தகம் ஏரியையும், மதுராந்தகம் பேருந்து நிலையத்தையும் ஆய்வு செய்கிறார்.
விழுப்புரம் மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் 1800 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக முதல்வரின் வருகையையொட்டி சாலை ஓரங்களில் பேனர்கள் வைக்கவும் டிரோன்கள் பறக்க விடவும், மலர் தூவவும் தடை விதிக்கபட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெறுவதால் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள், அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே போலீசாரின் சோதனைக்கு பின்னர் அனுமதிக்கபடுகின்றனர்.