ஜுலை, 11 –
தமிழகத்தில் மதுக்கடைகளை தனியார் ஏலம் எடுத்து, மது விற்பனை செய்தபோது ‘டெட்ரா பேக்’ எனப்படும் காகித டப்பாவில் மதுபானம் விற்கப்பட்டது. விலை குறைவு என்பதால் ’டெட்ரா பேக்’ மது விற்பனை அமோகமாக இருந்தது.
ஆனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.பின்னர் அரசாங்கமே மது விற்பனையில் நேரடியாக இறங்கியபோது ’டெட்ரா பேக்’ விற்பனை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் காகித டப்பாக்களில் மது விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது .
ஏன் இந்த திடீர் முடிவு?
சரக்கு அடித்து விட்டு, குடிமகன்கள், மது பாட்டில்களை சாலைகளில் வீசுகின்றனர்.நீர் வழித்தடத்தில் போட்டு உடைக்கிறார்கள்.இது விவசாயிகளுக்கு பிரச்சினையாக உள்ளது.எனவே பாட்டிலுக்கு பதிலாக‘டெட்ரா பேக்’கில் மது விற்பனை செய்ய வேண்டும் என பலரும் விரும்புகிறார்கள்.
டெட்ரா பேக்கை கையாழ்வது சுலபம். குறைந்த இடம் போதும்.சேதங்கள் முழுவதும் தவிர்க்கப்படும். மதுப்பிரியர்களில் பாதி பேருக்கு 180 மி.லி. கொள்ளளவு கொண்ட குவாட்டர் பாட்டிலை வாங்க பணம் இருப்பதில்லை.
குவாட்டர் பாட்டிலை பகிர்ந்து கொள்ள மற்றொருவர் வருகைக்காக நெடுநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. 90 மி.லி .( அதாவது கட்டிங்) கொள்ளளவில் ஒரு பாக்கெட் இருந்தால் சவுகரியமாக இருக்கும் என்பது குடிமக்கள் கோரிக்கை.
அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் 90 மி.லி.கொள்ளளவு கொண்ட காகித டப்பாக்களில் மது விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
குவாட்டர் பாட்டில் குறைந்த பட்ச விலையே 130 ரூபாய். ஆனால் 90 மிலி டெட்ரா பேக்கின் விலை 70 ரூபாய்க்கும் கீழேதான் இருக்கும்.
மேலும் கள்ளுக்கடைகளை திறப்பது குறித்தும் ஆலோசனை நடக்கிறது.
இது குறித்து அமைச்சர் முத்துசாமி கூறும்போது ‘’ விவசாயிகளுக்கு நலன் கிடைத்தால் கள் இறக்குவதற்கு அனுமதி அளிக்க முதல்-அமைச்சர் உள்ளிட்ட யாருக்கும் மாறுபட்ட கருத்து இல்லை.பிரச்சினகளை கட்டுப்படுத்த முடியும் என்றால்,கள் இறக்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் அமைச்சராக அண்மையில் கூடுதல் பொறுப்பேற்றுக்கொண்ட முத்துசாமியின் அதிரடி செயல்பாடுகள், குடிமகன்கள் மட்டுமின்றி மற்றும் டாஸ்மாக் ஊழியர்களிடையேயும் பாராட்டை பெற்று வருகிறதாம்.
இப்பபோது நாற்பது வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு கள் பற்றி அவ்வளவாக தெரியாது.ஆனால் தமிழ்நாட்டில் மீண்டும் கள்ளுக்கடைகள் திறக்கப்பட்டால் இவர்களிடம் கள் வரவேற்பை பெறுமா என்று தெரியவில்லை.
000