ஐதராபாத், ஜுன். 27- தெலுங்கானா மாநிலத்தின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் சந்திரசேகர ராவ் கோட்டையில் ஓட்டைகள் விழ ஆரம்பித்துவிட்டது நல்ல அறிகுறியாக தெரியவில்லை.
மன்மோகன் சிங் பிரதமராகவும் ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராகவும் இருந்த போது ஆந்திராவைப் பிரித்து தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கினார்கள். இதனால் காலம் காலமாக காங்கிரசுக்கு கை கொடுத்து வந்த ஆந்திரா, அந்தக் கட்சியை விட்டு விலகிப் போய்விட்டது. நீண்ட நாள் கோரிக்கையான தனி மாநிலத்தை உருவாக்கிக் கொடுத்த காங்கிரஸ், தெலுங்கானாவிலும் தோல்வியை தழுவியது.
தனி மாநிலப் போரட்டத்தை முன் எடுத்து தெலுங்கானா ராஷ்டிரிய சமுதி என்ற கட்சியைத் தொடங்கிய சந்திரசேகர ராவ் அங்கு ஆட்சியைக் கைப்பற்றினார். அவருடைய ஆட்சி இரண்டாவது ஐந்தாண்டில் தொடருகிறது. அவரும் தமது கட்சியின் பெயரை பாரதிய ராஷ்டீரிய சமுதி என்று மாற்றிக்கொண்டு தேசிய அரசியலிலும் கால் பதித்து வருகிறார். இந்த 2023 டிசம்பரில் தெலுங்கானாவில் சட்டமன்றத்துக்கு தேர்தல். ஒரு புறம் பாரதீய ஜனதா கட்சியின் அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கும் சந்திரசேகர ராவை இப்போது காங்கிரஸ் பெரிய சக்தியாக உருவெடுத்து தூக்கத்தைக் கலைக்கத் தொடங்கி விட்டது.
சந்திரசேகர ராவ் கட்சியின் கம்மம் தொகுதி முன்னாள் எம்.பி. பொங்குலேடி சீனிவாஸ் ரெட்டி, முன்னாள் அமைச்சர் கிருஷ்ணா ராவ் தலைமையிலாக குழுவினர் நேற்று ( திங்கள் கிழமை) டெல்லி சென்று மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தியை சந்தித்தனர். முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 35 பேர் இந்த குழுவில் இடம்பெற்றிருந்தனர். மேலும் அடுத்த மாதம் கம்மத்தில் பிரமாண்டப் பொதுக்கூட்டம் நடத்தி இவர்கள் தங்கள் பலத்தை நிரூபிக்க முடிவு செய்து உள்ளதாக தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா கலந்து கொள்வார் என்று தெரிகிறது.
இது மட்டுமல்ல, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா ஓய்.எஸ்.ஆர். தெலுங்கானா என்ற கட்சியை ஐதராபாத்தில் நடத்தி வருகிறார். அவரும் விரைவில் காங்கிரசின் சேர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதனால் தெலுங்கானாவில் காங்கிரஸ் மேலும் வலுப்பெற்று டிசம்பர் தேர்தலில் பாரதீய ராஸ்டீரிய சமுதிக்கு பெரும் சவாலாக இருக்கக் கூடும் என்ற பேச்சு ஆரம்பமாகி விட்டது.
000