கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு தெலங்கானா முதல்வரின் மகன் கேடிஆர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் கடந்த 10ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் தகவல்களின் படி, வாக்கு பதிவு எண்ணப்பட்டு வெற்றி அறிவிக்கப்பட்ட 223 தொகுதிகளில் 135 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், 65 இடங்களில் பாஜகவும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 19 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் 1 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியே முன்னிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 224 தொகுதிகளில் 113 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே கர்நாடகாவில் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலையில், காங்கிரஸ் 136 இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது. இந்த நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு தெலங்கானா முதல்வர் மகன் வாழ்த்து தெரிவித்து இருப்பது தற்போது பேசு பொருளாகியுள்ளது.
இது குறித்து தெலங்கானா முதல்வரின் மகனும், எம்பியுமான ராமாராவ் தனது ட்விட்டர் பதிவில், ‘‘தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கர்நாடக மக்களை மகிழ்விக்கத் தவறியதைப் போலவே, கர்நாடக தேர்தல் முடிவுகள் தெலுங்கானாவுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. அசிங்கமான மற்றும் பிளவுபடுத்தும் அரசியலை நிராகரித்த கர்நாடக மக்களுக்கு நன்றி. கர்நாடகாவில் புதிய காங்கிரஸ் அரசுக்கு எனது வாழ்த்துக்கள்’’ என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸையும், பாஜகவையும் ஒரே நிலையில் வைத்து எடைபோடுபவர் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் (கேசிஆர்). பாஜகவைத் தூக்கி வங்க கடலில் எறிய வேண்டும் என கூறிய கேசிஆர், வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அல்லாத மூன்றாம் கூட்டணியை உருவாக்க முயற்சி செய்து வருகிறார். காங்கிரஸ் அல்லாத கூட்டணியை உருவாக்க பீகார் முதல்வர் நிதிஷ்குமார், கேரள முதல்வர் பினராய் விஜயன், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார் கேசிஆர்.
ஆனால் மூன்றாம் கூட்டணி என்ற ஒன்று அமைந்தால், அது நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு சாதகமாகவே அமையும் என நிதிஷ்குமார் மறுத்துவிட்டார். கிட்டத்தட்ட அதே கருத்தை தான் தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் கூறிவருகிறார். இந்த சூழலில் தான் கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு தெலங்கானா முதல்வர் மகன் வாழ்த்து தெரிவித்து இருப்பது தற்போது பேசு பொருளாகியுள்ளது.