காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சச்சின் பைலட் தனிக்கட்சி தொடங்க இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் ராஜஸ்தான் அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் அசோக் கெலாட்டும், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையில் உள்ள உட்கட்சி பூசல் முடிவுக்கு வரவில்லை. சச்சின் பைலட்டை அவ்வப்போது டெல்லி மேலிடம் தலையிட்டு சமாதானப்படுத்திக் கொண்டே வந்தது.
ஆனால், முந்தைய வசுந்தரா ராஜே தலைமையில் நடந்த பா.ஜ அரசின் ஊழல்களுக்கு எதிரான நடவடிக்கை உள்ளிட்ட தனது கோரிக்கைகளில் உறுதியாக இருப்பதாக பைலட் தெரிவித்தார். இதனால் மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து சச்சின் பைலட் வெளியேறும் முடிவுக்கு வந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையின் பேரில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக் கட்சியை தொடங்க சச்சின் பைலட் திட்டமிட்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது. வரும் ஜூன் 11ம் தேதி சச்சின் பைலட்டின் தந்தையும், மறைந்த மூத்த காங்கிரஸ் தலைவருமான ராஜேஷ் பைலட்டின் நினைவு தினம். அன்றைய தினம் தமது தனிக்கட்சி குறித்த அறிவிப்பை சச்சின் பைலட் வெளியிடக் கூடும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.