தமிழில் வெற்றிப்படங்கள் கொடுத்த இயக்குநர்களின் அடுத்த கனவாக இருப்பது இந்திப்படம்.
கே.பாலசந்தர், பாரதிராஜா, கே.பாக்யராஜ் போன்ற ஜாம்பவான்கள் கோடம்பாக்கத்தில் இருந்து பாலிவுட் சென்று, சுவற்றில் அடித்த பந்தாக திரும்பி வந்தவர்கள் தான். தமிழில் விஜய்க்கு தொடர் ஹிட் கொடுத்த அட்லியும் இந்திக்கு போய் உள்ளார். ‘பிகில்’ படத்துக்குப் பிறகு அவர் இயக்கி வரும் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான்,கதாநாயகனாக நடித்துள்ளார். அவர் இரட்டை வேடத்தில் நடிக்கும் படம்- இது.
நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கவுரவ பாத்திரத்தில் தோன்றுகிறார்கள். அனிருத் இசை அமைத்துள்ள ஜவான், இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வரும் செப்டம்பர் மாதம் 7-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ‘பிரிவ்யூ’ அண்மையில் வெளியாகி பெருத்த வரவேற்பை பெற்றது.
படம் தொடர்பாக, ட்விட்டரில் ஷாருக்கான் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.
ரசிகர் ஒருவர், ’ஜவான்’ படத்தில் உங்கள் கேரக்டருக்காக நிறைய படங்கள் பார்க்க வேண்டியிருந்ததா?” என்று கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த ஷாருக், “நிறைய அட்லீ படங்கள் பார்த்தேன். உடல் மொழியை புரிந்துகொள்வதற்காக ரஜினிகாந்த், விஜய், அல்லு அர்ஜுன், யஷ் உள்ளிட்ட ஏராளமான நடிகர்களின் படங்களை பார்த்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஜவான் டிரைலர் குறித்து நயன்தாராவின் கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் வெளியிட்ட பதிவில், ‘பாலிவுட்டில் அறிமுகமாகும் அட்லியை நினைத்து பெருமைப்படுகிறேன். டிரைலர் சர்வதேச தரத்தில் இருக்கிறது.அட்லியின் பொறுமையையும், கடின உழைப்பையும் நன்கு உணர முடிகிறது. நயன்தாராவின் பாலிவுட் அறிமுகமே ஷாருக்கானுடன் அமைந்தது, கனவு நனவான மாதிரி இருக்கிறது. அனிருத் மற்றும் விஜய் சேதுபதிக்கு எனது பாராட்டுகள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த ஷாருக்கான், ‘விக்னேஷ் சிவனின் அன்புக்கு நன்றி. நயன்தாரா அருமையானவர். இது உங்களுக்கு முன்பே தெரியும். ஆனால், இப்போது அவர் நன்கு அடிக்கவும், உதைக்கவும் கற்றுக்கொண்டுள்ளார். எனவே நயன்தாராவிடம் எச்சரிக்கையாக இருங்கள், விக்னேஷ் சிவன்’ என்று குறும்பாக தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்து உள்ள விக்னேஷ், எச்சரிக்கையாக இருக்கிறேன். இதே வேளையில் காதல் மன்னனாகிய உங்களிடம் இருந்து நிறைய ரொமன்ஸ் செய்யவும் கற்றுக்கொண்டார் என்று பதில் அளித்துள்ளார்.
000