மக்களவை தேர்தல் வெற்றிக்கு தென் மாநிலங்களைத்தான் மலை போல் நம்பிக்கொண்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி.
உத்தரபிரதேசம், மே.வங்காளம் போன்ற பெரிய மாநிலங்களில் அந்த கட்சிக்கு வாய்ப்பே இல்லை. உ.பி.யில் சோனியா ஜெயிக்கலாம். மம்தா கோட்டையில், காங்கிரசின் அடித்தளம் ரொம்பவும் பலவீனமாக இருக்கிறது.
பீகார், மகாஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கூட்டணி கட்சிகளை நம்பியே காங்கிரஸ் உள்ளது
ராஜஸ்தான், சத்தீஷ்கர்,இமாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆட்சியில் இருந்தாலும் ,மக்களவை தேர்தலில் காங்கிரசுக்கு வெற்றி கிடைக்கும் என சொல்ல முடியாது. கடந்த தேர்தல் முடிவுகள் அப்படித்தான் இருந்தன.
இன்றைய நிலையில் கர்நாடகம், கேரளா, தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்கள் தான் அந்த கட்சியின் ஒரே நம்பிக்கை.தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் இருப்பதால் கிடைக்கும் தொகுதிகள் அனைத்திலும் வெல்ல முடியும் என நினைக்கிறது , காங்கிரஸ்.
கே.எஸ்.அழகிரி தமிழக காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்று நான்கரை ஆண்டுகள் ஆகிறது. புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என இங்குள்ள மூத்த தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தியதால், இது தொடர்பாக டெல்லி மேலிடம் பரிசீலித்து வந்தது.
தற்போது கிருஷ்ணகிரி எம்.பி. டாக்டர் செல்லகுமார், சிவகங்கை எம்.பி.கார்த்தி சிதம்பரம், விருதுநகர் எம்.பி. மாணிக் தாகூர் ஆகியோரில் ஒருவர் புதிய தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செல்லகுமார், மாணிக் தாகூர் ஆகிய இருவரும் மேலிடத்துக்கு மிகவும் நெருக்கமானவர்கள். ப.சிதம்பரம் மகன் என்பதால் கார்த்தியும், தலைவர் பதவிக்கான ரேசில் முன்னணியில் உள்ளார். இவர்களை அல்லாமல் கரூர் எம்.பி. ஜோதிமணி, மற்றும் சசிகுமார் செந்தில் ஆகியோர் பெயர்களும் பரிசீலனையில் இருக்கிறது.
பொதுவாக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருப்பவர்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை காங்கிரஸ் வழங்குவதில்லை. அதனால் தேர்தலில் போட்டியிடும் ஆர்வத்தில் உள்ள ஜோதிமணி, சசிகுமார் செந்தில் போன்றவர்கள் தலைவர் பதவி வேண்டாம் என்ற மன நிலையில் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
வருகிற 20 ஆம் தேதிக்குள் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.
அறிவித்த பிறகுதான் அனைத்தும் உறுதியாகும்.
000