சேலத்தில் டாஸ்மாக் கடையில் காலையிலேயே மது விற்கப்படுவதற்கு எதிரான போராட்டத்தின் போது, குடித்துக் கொண்டிருந்தவர்களை கடைக்குள் வைத்துப் பூட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கடைக்குள் சிக்கிக்கொண்ட குடிகாரர்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.
சேலம் டவுன் பேருந்து நிலையம் அருகே உள்ள தாதுபாய் குட்டை டாஸ்மாக் மதுபான கடையில் இந்த நிகழ்வு அரங்கேறியது. வழக்கம் போல இந்த மது பான கடையில உள்ள பாரில் இன்று காலையிலேயே குடித்து கொண்டிருந்தனர்.அதுவும் ஞாயிற்றுக் கிழமை என்பதால் மது பிரியர்கள் அதிக அளவில் வந்து இருந்தனர்.
இதனை அறிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பாருக்குள் சென்று பார்த்த போது சுமார் 25 பேர் குடி போதைியில் மூழ்கிக் கிடந்தனர். கடை ஊழியர்கள் கண்ணும் கருத்துமாக அவர்களுக்கு ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
அதிர்ச்சி அடைந்த ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், பூட்டு ஒன்றை கொண்டு வந்து மதுபான கடை பாரின் கதவை பூட்டிவிட்டனர். இதனால் உள்ளே இருந்த குடிகாரர்கள் வெளியே வரமுடியாமல் கத்த ஆரம்பித்தனர்.தகவல் கிடைக்கப் பெற்ற சேலம் டவுன் காவல் நிலைய போலீசார் தாதுபாய் குட்டை விரைந்து வந்து விசாரித்தனர் .
அப்போது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், போலீசாரிடம் பகல் 12 மணிக்கு மேல் மதுபானங்கள் விற்பதாக சொல்லிவிட்டு காலையிலேயே விற்பதால் தொழிலாளர்கள் பலர் வேலைக்குக் கூட செல்லாமல் குடித்து குட்டிச் சுவராகின்றனர். அதனால் தான் இந்த பூட்டுப் போடும் போராட்டம் என்றனர்.
இதனைக் கேட்டுக் கொண்ட போலீசார் , இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை சமாதானம் செய்துவிட்டு மதுபார் பூட்டை திறந்து குடிகாரர்களை மீட்டனர்.