மே.29
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று அமெரிக்காவிற்கு பயணம் செய்கிறார். நீதிமன்றம் வழங்கிய தடையில்லாச் சான்றிதழைத் தொடர்ந்து, சாதாரண பாஸ்போர்ட் கிடைத்த நிலையில், அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.
மோடி குறித்த அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தமது எம்.பி. பதவியை இழந்தார். இதைத் தொடர்ந்து, அரசு முத்திரை பதிக்கப்பட்ட அவரது சிறப்பு பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார்.
இதையடுத்து, அவர் அமெரிக்காவிற்கு செல்ல திட்டமிட்டதால், அதற்காக புதிய சாதாரண பாஸ்போர்ட் கோரி விண்ணப்பம் செய்தார். இதற்காக தடையில்லா சான்று வழங்கக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மனு தாக்கல் செய்தார். ஆனால், நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டுள்ளதால், ராகுலுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கக் கூடாது என புகார்தாரரான சுப்பிரமணிய சுவாமி எதிர்ப்புத் தெரிவித்தார்.
இருந்தபோதும், கடந்த வெள்ளிக்கிழமை, ராகுல்காந்திக்கு 10 ஆண்டுகளுக்கு பதிலாக, 3 ஆண்டுகளுக்கான சாதாரண பாஸ்போட்டை ராகுல்காந்திக்கு வழங்க தடையில்லா சான்றிதழ் அளித்தது.
இந்த பாஸ்போர்ட் நேற்று ராகுல்காந்திக்கு கிடைத்த நிலையில், இன்று மாலை அவர், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்குப் புறப்பட்டு செல்கிறார். அதைத் தொடர்ந்து, அவர் வாஷிங்டன், நியூயார்க் ஆகிய நகரங்களுக்கும் பயணம் செய்யவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.