June 13, 23
கிளம்பாக்கம் பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படும் என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.
சென்னையில் இன்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. கூடிய விரைவில் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்வார்கள் என கணக்கிடப்பட்டு உள்ளதால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் முதலுதவிக்காக ஒரு மருத்துவ மையம் ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. பேருந்து நிலையம் திறப்பிற்கு பிறகு எந்தவகையிலும் மக்களுக்கு அசவுகரியம் ஏற்படக்கூடாது என்பதற்காக திட்டமிடப்பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆம்னி பேருந்து நிலையத்துக்கு என்று தனியாக ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டு, கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் ரூ.30 கோடியில் அமைப்பதற்கான பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.
பேருந்து நிலையத்தை ஒட்டி பல்வேறு பணிகள் போர்க்கால அடிப்படையில் சுமார் ரூ.70 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருதல், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் போன்ற அனைத்தையும் நிறைவேற்றி, விரைவில் இந்த பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படும். இவ்வாறு கூறினார்.