டிசம்பர்-23.
குஜராத் மாநிலத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தில் இருந்த மது பானங்கள் அனைத்தையும் முன்று மணி நேரத்தில் பயணிகள் குடித்துத் தீர்த்தது பெரும் செய்தியாக பரவி வருகிறது.
சூரத் நகரத்தில் இருந்து பாங்காக் நகரத்திற்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவை டிசம்பர் 20- ஆம் தேதி ஆரம்பமானது. முதல் விமானத்தில் 175 பயணிகள் இருந்தனர்.
விமானத்தில் ரெட் லேபுள், ஷிவாஸ் ரீகல் போன்ற விஸ்கி வகைகளும் பிளாக் பகாடி ரம்மும், பிரா என்ற பீர் வகையும் இருப்பு வைக்கப்பட்டு இருந்தது. இந்த மதுபானங்கள் அனைத்தையும் பயணிகள் மூன்று மணி நேரத்திற்குள் குடித்து தீர்த்துவிட்டனர். எஞ்சிய ஒரு மணி நேரத்திற்கு கொடுப்பதற்கு மது இல்லாமல் விமானப் பணியாளர்கள் கையை விரிக்க வேண்டி ஆகிவிட்டதாம்.
இதனால் கடுப்பான பயணிகள் மது கேட்டு பணியாளர்களிடம் பெரும் சண்டையிலும் ஈடுப்பட்டு ரகளைக் கட்டி உள்ளனர்.
சரி இதில் என்ன ஆச்சரியம் என்று கேட்குறீர்களா?
காந்தி பிறந்த மாநிலம் என்பதால் குஜராத் மாநிலத்தில் மது விலக்குக் கொள்கை அமலில் உள்ளது. மாநிலத்தில் எங்கும் மதுக் கடைகள் கிடையாது. ஓட்டல்களிலும் பார் போன்றவை இல்லை. அதனால் குஜராத் மாநிலத்தில் இருக்கும் போது மதுக் குடிக்க முடியாதவர்கள்தான் விமானத்தில் ஏறிய உடன் அவ்வளவு சரக்கையும் குடித்து வேகத்தை தணித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
காயந்த மாடு கம்மங் கொல்லையில் புகுந்த கதை நினைவுக்கு வருகிறதா?
*
2024-12-23