சென்னையில் குட்கா விற்கப்படுவதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக வியாபாரியிடம் லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் வழக்கில் முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் , சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்டோர் மீது கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் மேலும் கால அவகாசம் வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கபடுவதாகவும், இதனால் வரி ஏய்ப்பு நடைபெறுவதாக கிடைத்த தகவலின் படி கடந்த 2016-ம் ஆண்டு சென்னை அடுத்த செங்குன்றத்தில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான கிடங்கில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது டைரி ஒன்று சிக்கியது. அதில் தடை செய்யப்பட்ட குட்காவை விற்பதைக் கண்டு கொள்ளாமல் இருக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்படும் விவரம் இடம்பெற்றிருந்தது.
மேலும் அப்போது அமைச்சர்களாகஇருந்த சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, போலீஸ் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை போலீஸ் ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
இது தொடர்பாக திமுக தரப்பில் தொடரப்பட்ட மனுவதை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது. விசாரணை நடத்திய சிபிஐ சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2021 ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் குட்கா வியாபாரி மாதவராவ் உள்ளிட்ட 6 பெயர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன.
இதையடுத்து முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜய பாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட 11 பேருக்கு எதிரான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு கடந்த ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி அனுமதி வழங்கியது. பின்னர் இவர்கள் 11 பேர் மீதும் கூடுதல் குற்றப்பத்திரிகை கடந்த நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த குற்றப்பத்திரிகை முறையாக இல்லை என்று கூறி திருப்பிக் கொடுத்த சிறப்பு நீதிமன்றம் குற்றம்சாட்டபட்டவர்கள் மீது விசாரணை நடத்த அரசு அனுமதி அளித்தது தொடர்பான ஆவணங்களை இணைத்தும், தவறுகளை திருத்தம் செய்தும் முழுமையாக தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டது
இந்த வழக்கு சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன் செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் சி.பி.ஐ. தரப்பில் ஆஜராகி டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்டோர் மீது விசாரணை நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தது தொடர்பான ஆவணம் கிடைக்கப்பெறாததால் மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி மலர் வாலன்டினா வரும் 25 – ம்தேதி ஒத்திவைத்துள்ளார்.