மே.5
தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், கடந்த ஒரு வாரமாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் தடை விலக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், வட்டக்கானல் உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.தொடர்ந்து அருவியின் நீர்வரத்து சீராகாமல் இருந்ததால் சுற்றுலா பயணிகளுக்கு தொடர்ந்து 7 நாட்கள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீரானது. இதையடுத்து, கடந்த ஒரு வாரமாக அமலில் இருந்த தடை விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சுற்றுலாப் பயணிகள் இன்று முதல் அருவியில் குளிக்கலாம் என்றும், தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட் ராஜா அறிவித்துள்ளார்.