ஜுலை, 10-
அருவிகள் ஆர்ப்பரிக்கும் குற்றாலத்தில் இப்போது உச்சக்கட்ட சீசன்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வெளுத்து வாங்கும் மழையால் அனைத்து அருவிகளிலும் நீர் கொட்டுகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால், சுற்றுலாப்பயணிகள் ஆயிரக்கணக்கில் வந்திறங்கினர். இதமான சாரலின் அரவணைப்பில் அவர்கள் குளிர்ந்து போனார்கள்.
பேரிறைச்சலோடு மூலிகை தண்ணீர் பொழிந்த பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் கூட்டம் அலை மோதியது.குடும்பம் ,குடும்பமாக வந்திருந்த பயணிகள் ஆசை தீர குளித்து மகிழ்ந்தனர்.
இயற்கை இந்த ஆண்டு ஏமாற்றாமல் வழக்கமான மழைப்பொழிவை தந்து, அருவிகளை நிறைத்தாலும்,மக்களுக்கான வசதிகள் வறண்டே இருக்கிறது. பேரருவி பூங்காவில் அனைத்து உபகரணங்களும் சேதமுற்றுள்ளன.
சமூக விரோதிகளின் கூடாரமாகி விட்ட பூங்காவில் எங்கெங்கும் உடைந்த மது பாட்டிகளே காணக்கிடைக்கின்றன.
பேரருவியில் சில மாதங்களுக்கு முன் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, அங்குள்ள பெண்கள் உடை மாற்றும் அறை நொறுங்கியது.அதனைக்கூட பேருராட்சி நிர்வாகம் சீரமைக்கவில்லை.
ஆய்வுக்கு என சொல்லிக்கொண்டு ஓய்வுக்கு வரும் அதிகாரிகள், ’குற்றாலத்தில் புதிய வசதிகள் செய்து தரப்படும்’ என வாய்நீளம் காட்டி விட்டு செல்வதோடு சரி. ஏற்கனவே உள்ள வசதிகள் கூட குற்றாலத்தில் இல்லை என்பதுதான் உண்மை.
சுற்றுலாவை மேம்படு்த்துகிறது அழகு இதுதானோ?
000