கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் பெய்த கனமழையினால், புதிதாகப் போடப்பட்ட சாலையில் வந்த இருசக்கர வாகனங்கள் வழுக்கி அடுத்தடுத்து விழுந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பாலுசேரி என்னும் நகர பகுதியை இணைக்கும் கக்கோடி கிராம சாலை அண்மையில் புதிதாக சீரமைக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த பகுதியில் மழை பெய்து வந்தது. அப்போது அந்த சாலை வழியாக இருசக்கர வாகனங்களில் வந்த பலரும், வழுக்கி விழுந்து காயமடைந்தனர். அந்த சாலையில் சென்ற 3 இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து சறுக்கி விழும் காட்சிகள் முன்னால் சென்று கொண்டிருந்த பேருந்தில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒருவர் தான் சாலையில் சறுக்கி விழுந்ததை மறந்து, தனக்கு பின்னால் வந்து வழுக்கி விழுந்து காயமடைந்தவரை காப்பாற்ற ஓடிய காட்சிகள் வைரலாகிவருகிறது.