மலையாள சினிமாவில் தயாரிப்பாளர்களுக்கும், நடிகர்களுக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ளது.
படத்தயாரிப்பு செலவு அதிகரித்துள்ளதால், ஜூன் மாதம் 1-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக கேரள சினிமா தயாரிப்பாளர்கள் அதிரடியாக அறிவித்துள்ளனர்.
இதனை கேரள தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தையுமான சுரேஷ் குமார் ஊடகங்களில் தெரிவித்தார்.
கேளிக்கை வரி அதிகரிப்பு, ஜி.எஸ்.டி .வரி போன்றவை ,படத்தயாரிப்பு செலவு அதிகரித்துள்ளதற்கான காரணம் என்று சொன்ன அவர், நடிகர்களின் சம்பளம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து விட்டதாக புகார் கூறினார்.
தங்கள் போராட்டத்துக்கான பிரதான காரணமாக கீர்த்தியின் தந்தை சுரேஷ் குமார், நடிகர்களை சுட்டிக்காட்டி இருந்தார்.
நடிகர்கள் சம்பளத்துடன் ஒப்பிடும்போது, 10 சதவிகிதம் கூட தியேட்டரில் வசூல் ஆவதில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.(தனது மகள் கீர்த்தையையும் சேர்த்துத்தான் அவர் குறிப்பிட்டிருக்க வேண்டும் )
இதற்கு மலையாள சினிமா உலகில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நடிகர்கள் மட்டுமின்றி, தயாரிப்பாளர்களும் இந்த ‘ஸ்டிரைக்’கை ஏற்றுக்கொள்ளவில்லை.
மோகன்லால் நடிக்கும் படங்களை பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கும் அந்தோணி பெரும்பாவூர் கூறும்போது, ‘வேலைநிறுத்தம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும். எதற்கும் வேலைநிறுத்தம் சரியான முடிவாக இருக்காது. தயாரிப்பாளர் சங்கம் சார்பாக, இந்த முடிவை எடுக்க சுரேஷ்குமாருக்கு யார் அதிகாரம் அளித்தார்கள் என்பது தெரியவில்லை” என போர்க்கொடி தூக்கினார்.
நடிகர் விநாயகன் உட்பட வேறு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் நடிகர் ஜெயன் செர்தலா, தயாரிப்பாளர்களை விளாவி தள்ளி விட்டார்.
கொல்லத்தில் நேற்று பேட்டி அளித்த அவர், ‘ தயாரிப்பாளர்கள், தங்கள் படத்தில் நடிக்கும் நடிகர்களை வேலைக்காரர்களாகவே பார்க்கிறார்கள்- தயாரிப்பு செலவு அதிகரிப்புக்கு நடிகர்கள் காரணம் அல்ல-தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்ட நேரத்தில், அவர்களுக்கு நடிகர்கள் பணம் கொடுத்து உதவி உள்ளனர். அதையெல்லாம் மறந்து இப்போது பேசுகிறார்கள்’என்றார், அவர்.
அடுத்த ‘ரவுண்டை’ யார் ஆரம்பிக்க போறாங்களோ ?
–