சாமியார் நித்தியானந்தாவுக்கு எப்போதும் செய்திகளில் அடிபட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்பதில் தீராத ஆசை உண்டு. அவரைக் கவனிக்கிறவர்களுக்கு இது புரியும்.
நித்தியானந்தாவின் இப்போதைய அறிவிப்பு தமது கைலாச நாட்டின் பிரதமர் பதவியில் நடிகையும் தமது சினேகதியுமான ரஞ்சிதாவை அமர்த்தி இருப்பது பற்றிய செய்திதான்.
திருவண்ணாமலையில் கடந்த 1976- ஆம் ஆண்டு பிறந்த ராஜசேகரன் என்பவர்தான் தமது பெயரை நித்தியானந்தா என்று மாற்றிக் கொண்டார். முதலில் திருவண்ணாமலையிலும் பிறகு திருச்செங்கோட்டிலும் ஆசிரமங்களை நடத்திய அவர் பின்னர் பெங்களூர் புறநகரான பிடதியில் இடம் வாங்கி ஆசிரமத்தை ஏற்படுத்தினார்.
இந்த ஆசிரமத்தில் நடிகை ரஞ்சிதாவுடன் அவர் இருந்த வீடியோ கடந்த 2010-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொலைக் காட்சிகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவருக்கு கடுமையான எதிர்ப்புகள் உருவானது. நிறைய புகார்கள் குவிய ஆரம்பித்தன.
நித்தியானந்தா மீது பாலியல் பலாத்கார வழக்கு ஒன்று கர்நாடக மாநில நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் இருவரை அவர் கடத்திச் சென்றுவிட்டதாக பெற்றோர் கொடுத்த புகார் ஒன்று விசாரணயில் இருக்கிறது. அன்னியச் செலவாணி மோசடி தொடர்பாக விசாரிப்பதற்காக நித்தியானந்தாவை அமலாக்கத் துறையும் தேடிக் கொண்டு இருக்கிறது.
இவர்கள் அனைவருடைய கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டு இந்தியாவை விட்டு கடந்த 2018- ஜுன் மாதம் வெளியேறிய நித்தியானந்தா, அதன் பிறகு கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அதன் அதிபராக இருப்பதாக செய்திகளை வெளியிட்டார். அந்த நாட்டின் குடியுரிமை பெறுவதற்கான அறிவிப்புகளும் வெளியானது. அங்கிருந்தபடி அவ்வப்போது இணைய தளம் வழியாக ஆன்மீக பிரச்சாரமும் செய்து வருகிறார். கடைசியாக இரு தினங்கள் முன்பு குரு பூர்ணிமா நாளன்று அருளுரை வழங்கி தன் பக்தர்களை மகிழ்வித்தார்.
இப்போது அந்த கைலாசா நாட்டின் பிரதமராக நடிகை ரஞ்சிதாவை நியமித்து இருப்பதாக செய்திகளை நித்தியானந்தா வெளியிட்டு இருக்கிறார்.
கைலாசா நாடு எங்கு இருக்கிறது என்பதே மர்மமாக உள்ளது. வட அமெரிக்கா கண்டத்துக்கும் தென் அமெரிக்கா கண்டத்துக்கும் இடையில் அட்லாண்டிக் பெருங்கடலில் நிறைய தீவுகள் உள்ளன. கிரிக்கெட் போட்டிகளுக்குப் பேர் போன மேற்கு இந்திய தீவுகள் இந்த பகுதியில் தான் இருக்கிறது. இங்கு ஒரு தீவை விலைக்கு வாங்கி அதில் நித்தியானந்தா கைலாசா நாட்டை உருவாக்கி இருக்கிறார் என்று ஒரு தகவல் உண்டு.
அது உண்மை இல்லை. ஆஸ்திரேலியாவுக்கும் கிழக்கே பசிபிக் பெருங்கடலில் தான் பிஜி என்ற தீவு நாடு இருக்கிறது. அந்த வட்டாரத்தில் தீவு ஒன்றில் நித்தியானந்தாவின் கைலாசா நாடு இருக்கிறது என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள்.
தீவோ அல்லது நிலப்பரப்போ எதுவாக இருந்தாலும் ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தால் தான் அதனை ஒரு நாடாக மற்ற நாடுகள் ஏற்றுக்கொள்ளும். அதன் பிறகுதான் அந்த நாட்டுடன் தூதரக உறவு, வணிக உறவு போன்றவற்றை ஏற்படுத்திக் கொள்வார்கள்.
இதனால் சிலர், நித்தியானந்தா எத்தனை முறை கூவினாலும் அவருடைய கைலாசா ஒரு போதும் நாடாகாது அது ஒரு வெற்று அறிவிப்பாத்தான் இருக்கும் என்கிறார்கள்.
இந்திய புலனாய்வு அமைப்புகள் களத்தில் இறங்கினால் கைலாச நாடு எங்கிருக்கிறது என்பதை கண்டுபிடித்து விட முடியும்.
அது நடக்குமா?
000