உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிபெற்றார். இதைத் தொடர்ந்து, அவர் எம்.எல்.ஏவாக முறைப்படி பதவியேற்றுக்கொண்ட நிலையில், கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி திடீர் உடல் நலக்குறைவால்,சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுவாசக்கோளாறு பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த இளங்கோவனுக்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அதைத் தொடர்ந்து, அவருக்கு கொரோனா தொற்று இருப்பதும் உறுதிசெய்யப்பட்டது. கடந்த 20 நாட்களாக சுவாசக்கோளாறு மற்றும் கொரோனா தொற்றுக்காக சிகிச்சைபெற்றுவந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், இன்று உடல்நலம் தேறிய நிலையில், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இது தொடர்பாக, அவர் சிகிச்சை பெற்றுவந்த தனியார் மருத்துவமனை நிர்வாகமும் அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.