மே.22
கோடை சீசனில் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை குறைக்கவும், நாடு முழுவதும் 380 சிறப்பு ரயில்களில் 80 ஆயிரம் பெட்டிகளுடன் 6369 டிரிப்களை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சேலம் கோட்ட மக்கள் தொடர்புத்துறை அதிகாரி மரிய மைக்கேல் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த ஆண்டு கோடை சீசனில், பயணிகளின் வசதிக்காகவும், பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், இந்திய ரயில்வே 380 சிறப்பு ரயில்களில் 80 ஆயிரம் பெட்டிகளுடன் 6369 டிரிப்களை இயக்க உள்ளது. 2022ல் 4,599 டிரிப்கள் 348 சிறப்பு ரயில்கள் மூலம் இயக்கப்பட்டன. இந்த ஆண்டு கூடுதலாக 1770 டிரிப்களை இயக்குகிறது. கடந்த கோடையில் சராசரியாக ஒரு ரயிலுக்கு 13.2 டிரிப்கள் இயக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஒரு சிறப்பு ரயிலுக்கு 16.8 டிரிப்கள் இயக்கப்படுகின்றன.
இந்த வருடம் பாட்னா – செகந்திராபாத், பாட்னா – யஸ்வந்த்பூர், பரௌனி – முசாபர்பூர், டெல்லி – பாட்னா, புது தில்லி – கத்ரா, சண்டிகர் – கோரக்பூர், ஆனந்த் விஹார் – பாட்னா, விசாகப்பட்டினம் – புரி – ஹவுரா, மும்பை – பாட்னா, மும்பை – கோரக்பூர் ஆகிய டிரிப்கள் இணைக்கப்பட்டு உள்ளன. இந்த 380 சிறப்பு ரயில்களில் 25,794 பொதுப் பெட்டிகளும் 55,243 ஸ்லீப்பர் பெட்டிகளும் உள்ளன. ஜெனரல் கோச்களில் 100 பேர் பயணிக்கும் வசதி உள்ளது. அதே சமயம் ஸ்லீப்பர் கோச்களில் 72 பேர் பயணிக்க முடியும்.
கோடை கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து மண்டல ரயில்வே சிறப்பு பயணங்களை இயக்கத் தயாராகியுள்ளன. இந்த சிறப்பு ரயில்கள் மூலம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, ஒடிசா, மேற்கு வங்கம், பீகார், உத்தரப்பிரதேசம், டெல்லி போன்ற பல்வேறு மாநிலங்களிலிருந்து இணைப்பு உறுதி செய்யப்படுகிறது. தேவையின் அடிப்படையில், ரயில்களின் எண்ணிக்கை மற்றும் டிரிப்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.