ஏப்ரல்.26
உதகையில் கோடை சீசனை முன்னிட்டு 26ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது, குன்னூர் – பர்லியார் சாலை மற்றும் கோத்தகிரி சாலைகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. பகல் நேரங்களில் உதகையில் கனரக வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையில் கோடை சீசன் தொடங்கியுள்ளதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வர தொடங்கி உள்ளனர். இதனால் சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. இதனையடுத்து உதகையில் போக்குவரத்தை முறைப்படுத்துவது, அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் புதிய மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அம்ரித், காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் வாகன ஓட்டுநர்கள் சங்கத்தினர், விடுதி உரிமையாளர்கள் சங்கத்தினர், உணவு விடுதிகள் சங்கத்தின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கோடை சீசன் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது 26ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் மே மாதம் இறுதி வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
கோடை சீசன் முடியும் வரை உதகை – குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலை மற்றும் உதகை – கோத்தகிரி – மேட்டுப்பாளையம் சாலைகள் ஒரு வழி பாதைகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாக மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும் என்றும், மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு வரும் வாகனங்கள் பர்லியார், குன்னூர் சாலையில் அனுமதிக்கப்படும்
கன ரக வாகனங்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை உதகை நகருக்குள் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோடை சீசனுக்காக காந்தல், ஆவின் மைதானங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா தலங்களுக்கு சென்றுவர, பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதி ஏற்படுத்தி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் தெரிவித்தார்.