நடப்பாண்டில் கோடை வெயில் முன்னதாகவே துவங்கி வாட்டி வரும் சூழலில் உடுமலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள மாமரங்களில் பூக்கள் மற்றும் பிஞ்சு உதிர்தல் அதிகரித்து வருவதால் கடந்தாண்டை விட சாகுபடி குறையும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களில், மா சாகுபடி அதிகளவு செய்யப்பட்டுள்ளது. மானுப்பட்டி, ஜல்லிபட்டி, கொங்குரார்குட்டை, தளி, பொன்னாலம்மன்சோலை, ராவணாபுரம் உட்பட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில், மானாவாரியாகவும், இறவையாகவும் பல வகையான மாமரங்கள் சாகுடி செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இப்பகுதியில் ஆண்டுக்கு இரண்டு சீசன்களில், மாங்காய் உற்பத்தி இருக்கும். அதில், சித்திரை பட்டம் எனப்படும் கோடைகால சீசனே அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நிலையில், இந்த ஆண்டு கோடை வெயில் முன்கூட்டியே தொடங்கிவிட்டதால், அதிக வெப்பம் காரணமாக, மா விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பம் உள்ளிட்ட காலநிலை மாற்றங்களால், மா மரங்களில் இருந்து, பூக்கள் மற்றும் பிஞ்சு உதிர்வது அதிகரித்துள்ளது.
நோய் தாக்குதலும் பரவலாக இருப்பதால் இந்த ஆண்டு மாம்பழ விளைச்சல் குறைய வாய்ப்புள்ளதாக விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், மாங்காய் நல்ல திரட்சியாகும் முன்பே, அதிக வெயில் காரணமாக வெம்பி கீழே விழுவதும் அதிகரித்து வருவதால், பெருமளவில் இழப்பு ஏற்படும் என்றும் உடுமலை பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.