ஏப்ரல்.23
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சாலையை கடக்க முயன்ற யானையை படம்பிடிக்க முயன்றவர்களை, அந்த யானை துரத்திய காட்சிகள் வெளியாகியுள்ளன.
கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை மாமரம், கீழ்கூப்பு, மேல்கூப்பு, தட்டப்பள்ளம், கோழிக்கரை, முள்ளூர், அறையூர், கரிக்கையூர்,செம்மனாரை உள்பட சுற்றுவட்டார கிராம பகுதிகளில் ஏராளமான பலா மரங்கள் உள்ளன. வழக்கமாக இந்த மரங்களில் கோடை காலத்தில் பழங்கள் காய்த்து குலுங்குவது போல இந்த ஆண்டும் காய்த்துள்ளது. இதனால் காட்டு யானைகள் குஞ்சப்பனை பகுதியில் முகாமிட்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்று முன்தினம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் முள்ளூர் பகுதியில் சாலையை கடக்க ஒற்றை காட்டு யானை வந்துள்ளது. அதனை கண்ட வாகன ஓட்டிகள் சற்று தொலைவிலேயே பாதுகாப்பாக வாகனங்களை நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து, யானையை தங்களது மொபைல் போனில் படம் பிடித்ததுடன், சத்தம் போட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த காட்டு யானை திடீரென அவர்களை துரத்தியது. யானை துரத்தி வருவதைக் கண்ட அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் யானை சாலையைக் கடந்து அருகிலிருந்த தேயிலைத் தோட்டத்திற்குள் சென்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.